Saturday 28 June 2014

"விருந்துண்ணிகள்"


"விருந்துண்ணிகள்"


யாதொரு வெற்றிப்பிரஸ்தாபமிடும்
அஸ்தமனப்பொழுதிலும்
அஸ்திவாரம் பற்றும் 
இலவச இணைப்புகளாக ஒட்டிக்கொள்கிறது 
எவரென்றேயறியாத விருந்துண்ணிகள்.

அடையாள அட்டை கழுத்தோடு
ஐந்து நட்சத்திரத்திலும்
அன்றாடம் காய்ச்சியோடு
அரசுக்கடையிலும்
பொதுக்குழுவிடும் விருந்துண்ணிகள்
அடுத்த கொழுதொடையை 
நிர்ணயித்தே நிறைக்கின்றன
அன்றைய உறிஞ்சுதல்களை. 

தாகம் தீர்ந்த
விருந்துண்ணிகளின்
விரய பரோபகாரத்தில்
தலைப்பாகட்டித் தெருநாய்களுக்கு
கொண்டாட்டமாம்.
தெருநாய்களின் புஷ்டிகண்டு
தலைப்பாகட்டித் தலைவருக்கும்
கொண்டாட்டமாம்.

பயணிகள் கவனத்திற்கு,
ஒருவழிச்சாலையில் 
இருநூறில் விரைவது
எழுநூறைத்தாண்டிய 
விருந்துண்ணிகளாய் இருக்கக்கூடும்.
எமலோகப்பயணம் செல்வது 
நீங்களாகவும் இருக்கக்கூடும்.

வெண்ணெய்ரொட்டிக் குடில்களிலும்
சிகப்புத் தாத்தா கடைகளிலும்
எப்போதும் வீற்றிருக்கின்ற
மெல்லின விருந்துண்ணிகளின்
ஜனனதினக் கொண்டாட்டங்களில்
மதுரை முனியாண்டி
மரணதினம் அனுஷ்டிக்கிறார்.

பெரியகாந்திக்கு குழம்பி வாங்கும்
விருந்துண்ணிகள் பெரும்பாலும்
சதை தின்ற பசியினால்
சூம்பிய கைகள் கொண்டு
ஒட்டிய வயிறு தடவும்
நடைபாதை பிஞ்சுகளை,
கண்டும் காணாதோர்களே.

பள்ளிப்பழக்கமாகிவிட்ட
விருந்துக்கலாசாரத்தை
நாகரீக மாற்றமென
உண்ணிகள் விடையளிக்க,
ஜகங்கள் தீர்ந்த பாரதி
பிரபஞ்ச மூலைகளை
துழாவிக்கொண்டிருப்பதாய் கேள்வி.

Wednesday 18 June 2014

கவிதையும் விமர்சனமும் 6 - என் கிராமம்



கவிதை : என் கிராமம்
எழுதியவர் : நுஸ்கி

பன மர காடு
தென்னங் கீற்று வீடு
களிமண் தரை
தலை தட்டும் கூரை

முற்றத்தில் தக்காளி
சிவந்த குடை மிளகாய்
கர்ப்பணியான கத்தரி
கனத்துப்போன வெண்டக்காய்

தொலை தூரம்
ஒற்றைவழி பாதை
வெப்பமேற்றும் உச்சி வெயில்
காற்றுக்கு ஆடும் வேப்ப மரம்
அதில் தொங்கும் தேன் வதை

சுத்தமான கற்று
அதில் இணைந்த குயிலின் ஓசை
குருவியின் சத்தம் மூலிகை வாசம்
முற்றம்மெங்கும்
கொடி மல்லிகை படரும்

அத்தி மரம் பூக்கும்
ஆலமரம் காய்க்கும்
ஆத்தோரமாய் நிற்கும்
மா மரம் இனிக்கும்

பச்சை நிறம் வயல் காட்டும்
வெண்ணிறமாய் மாட்டுப்பால் இருக்கும்
செந்நிற மண்ணில் நெல் மணி
செழித்து தூங்கும்

இத்தனையும் இருந்த மண்ணில்
இன்றைக்கு அடுக்கு மாடி
இத்தனையும் காட்டும்
ஒரு சதுரடி தொலைகாட்சி பெட்டி

Saturday 14 June 2014

மதுரைக்காரி!!



மதுரைக்காரி


அண்ணஞ் சொல்லி கேட்டதில்ல,
ஆயிஅப்பந் திட்டி திருந்தவில்ல,
அலப்பரை பண்ணி திரிஞ்சவந்தேன்,
அழும்பு பேசி அலைஞ்சவந்தேன்.

ஒத்தக்கடை ஊர்க்காரி - உன்
ஒசரம் காட்டி வுழுக வச்ச,
ஓரப்பார்வை பாத்து பாத்து
ஒசக்க என்ன பறக்க வச்ச.

பட்டறய போட்டு திரிஞ்ச மனச
ஆட்டய போட்டு அலைய வுட்ட,
எட்ட நின்னு சாட பேசி
கெட்ட கிறுக்கு புடிக்க வுட்ட.

காவாலிப் பய காலு ரெண்டும்
களவாணி உன்வாசப் பக்கம், 
கருக்க வரை அலையுதுடி,
காத்து காத்து நின்டு நின்டு,
கால்ல ஆணி முளைக்குதுடி.

அழக கட்டிக்க ஆச சொன்னேன்
அராத்து பண்ணி அழுக வச்ச,
எதுர வந்தும் நெசம் சொல்லாம
மதுரக்கார மனம் மறுக வச்ச.

வீம்பு போதும் பொட்டப்புள்ள,
வம்புக்காரி, உன் எதயத்துள்ள,
இம்புட்டுகோண்டு இடங் கிடைக்க 
எம்புட்டு காலம் காத்து கெடக்க.

காதல் கசக்குதய்யா!! - கவிதை


காதல் கசக்குதய்யா!!

கன்னி இதழ் குறிக்கும்
சின்னமாக மாறிவிட்ட
வண்ணரோஜாக்களில்
காணப்படுவதில்லை 
நட்ட தோட்டக்காரனின்
ஒட்டிய வயிறு.

கவிதையும் விமர்சனமும் - 5



கவிதை : தெருவோர பிஞ்சுகள்.
எழுதியவர் : கீதமன்.

கருவோடு
வந்த
கால்கள்
திருவோடு
சுமந்து
தெருவோடு
அலைகின்றன

கருவறைக்குள்
கண் விழித்த
நம் நாட்டின்
எதிர்காலம்
தெருவோரம்
துயில்கின்றன

வித்திட்டவர்
வினைப்பயனை
பெற்ற
வீணர்களின்
விதிச் சுமையை
வீணாய்
பிஞ்சு வித்துக்கள்
நோகின்றன

கால் வயிற்று
விருந்துக்கு
அரை கும்பி
கஞ்சிக்கு
வெயிலில்
வெந்து
வேகாமல்
வேகின்றன

சில்லறைகள்
விரல்
எண்ணி
பள்ளிப்
படிப்பின்றி
கணிதம்
இவர் வசமானது

கல்விக்கு மனமின்றி
பள்ளி அனுமதிக்கு
பணமுமின்றி
பள்ளிக்கூடமது
விஷமானது

ஆடை கிழிசல்களின்
அடைக்காத
வெற்றுவெளி மேடைகளில்
அவமானம்
அரங்கேறுது

வாழ்க்கை கோடையிலும்
வழிந்தோடும்
வறுமையின் ஓடையில்
இவர்
மானம் வழிந்தோடுது

"வல்லரசு ஆகி விட்டோம்
வரலாற்றில் இடம் பிடித்தோம் " என
வன்
வாய் அரசு
கூத்தாடுது

கூடடைய
கூடின்றி
விழுந்துதுறங்க
வீடின்றி
மென்
பிஞ்சு
பிறை தேயுது

Monday 26 May 2014

சாம்பார் வைப்பது எப்படி?!?!



சாம்பார் வைப்பது எப்படி?!?!


துவரையா?... கடலையா?…
இந்தப் பருப்பில்தான் எத்தனை வகை?
அவரையா?... முருங்கையா?...
எந்த சேர்ப்பில்தான் கூடுதல் சுவை?

அரை விடுமுறை நாளன்று,
ஆனைவயிறின் அசுரப்பசியில்,
அதிகப்பிரசங்கி நண்பன் கொடுத்த,
அநியாய யோசனைதான். 
சொந்த சமையல் சாம்பார்.

தட்டு கழுவக்கூட - சமையல் 
கட்டு பக்கம் சென்றதில்லை.
வெந்நீர் வைத்துக்கூட - எங்கள்
அடுப்பிற்கு அனுபவமில்லை.

இருந்தாலும் துணிந்து விட்டோம்,
இயலுமென்று இஞ்சியோடு.
போர்க்கோலம் பூண்டு விட்டோம்,
கரண்டி கடாய் கத்திரிக்காயோடு. 

எடுத்தவுடனே சந்தேகம்
எண்ணெய் எவ்வளவென்று?
என் நண்பனுக்கோ பெருங்குழப்பம்,
எந்த எண்ணெய் என்று?

இறைவன் விட்ட வழியென்றேன்-நல்ல வேளை
இருந்தது ஒன்றுதான் வேறில்லை.
எடுத்து ஊற்றி காய்ந்தவுடன்- இட்டேன்
கடுகு உளுந்து வேப்பிலை.

இட்ட கடுகும் வெடித்து தெறித்தது,
எம் வீரத்தமிழ்ப் பெண்ணைப்போல.
தெறித்த சூட்டில் பயந்து போனேன்,
எம் பெண்ணைத் தொட்ட கயவன்போல.

இடையில் வந்தது முனகல் சத்தம் - என்
இனிய நண்பன் அழுகும் சத்தம்.
வெட்டுகிறேன் வெங்காயம் பேர்வழியென்று,
கொட்டுகிறான் கண்ணீரை உப்புக்கென்று.

அழுத்தமானியும் அடித்து அழைத்தது,
கொடுத்த துவரையும் கொஞ்சமே வெந்தது.
திருகி நெருப்பை கூட்டி வைத்து,
திரும்பையில் தோன்றியது, புளியை மறந்தது. 

எலந்தையளவா? எலுமிச்சை அளவா?
எண்ணி மூளை குழம்பினேன்.
எருமை அளவை எடுத்துருட்டி,
நண்பன் கரைக்க, திடுக்கிட்டேன்.

வெள்ளையன் வெங்காயம் பொன்னனாக,
சிவந்த தக்காளி நாணிக் கரைய,
பச்சை மிளகாயை மேலாய்த் தூவி,
பார்த்துரசித்தேன் தேசக்கொடியின் அழகை அதனில்.

நான்காம் முறையாய் கூவிக்கூவி,
வெந்தேன் என்றது துவரம்பருப்பு.
சேர்த்தே இட்டதில் முருங்கைக்காயும்,
செந்தேன் ஆனது மிகவும் சிறப்பு.

அனுபவமிக்க பெண்டிற்கு - அரைத்தால்தான்
அது சாம்பார் பொடி.
அரைத்தறியா பிரம்மச்சாரிக்கு - அரைக்காசில்
அது கிடைக்கும் உடனடி.

எருமைப் புளியில் கையள வெடுத்து,
அருமைத் துவரை அனைத்தையும் கலந்து,
முருங்கை துண்டுகள் முழுதாய் சேர்த்து,
இருகுவளைத் தண்ணீரை கொடுத்தேன் கொதிக்க.

இறுதியாய் சிறிது பெருங்காயம் சேர்க்க,
உறுதியாய் ருசி பார்த்து உப்பைக் கூட்ட,
தென்றலாய் அறையெங்கும் சாம்பார் வாசம்,
நுகர்கையில் தெரிந்ததென் அன்னை நேசம்.

ஓரைந்து நிமிடங்கள் மூடி வைத்து,
அருகிலே சட்டியில் அரிசி சமைத்து,
அப்பளத்தோடு தான் உண்பதெப்படி!! - நாங்கள்
முதன்முதலாய் சாம்பார் சமைத்ததிப்படி!!!.



Sunday 25 May 2014

கவிதையும் விமர்சனமும் - கண்ணீர் தொட்டு கவிதை எழுது



கவிதை : கண்ணீர் தொட்டு கவிதை எழுது
எழுதியவர் : வினோதன்

குருதிக்குடுவை நிறைய 
பெருங்குணம் சுமந்தபடி 
சமூகம் நோக்கினேன், 
தட்டிவிட்டபடி - கையில் 
சாக்குப்பை திணித்து 
பணம் பொறுக்கும்படி 
பரிவின்றி பணிக்கப்பட்டேன் ! 

உயர்கல்வி உடுத்தி 
தெரு கடக்கும்போது 
அழுத்தமாய் சிரித்தது 
அழுக்குச் சமூகம் - நீ 
யாரென்பதை - நின் முகம் 
தவிர்த்து - பண முகாமே 
தீர்மானிக்கும் என்றபடி ! 

என் திறமைகளை 
அளவீடு செய்ய மறுக்கும் 
செவிட்டு உலகம் 
செருப்பை உற்றுநோக்கி 
என்னை கணிக்கிறது ! 

ஏறி-இறங்கிய உடுப்பற்ற 
நான் - ஏற-இறங்கவே 
பார்க்கப் படுகிறேன் - என் 
அழுக்கற்ற அகம் பொசுங்க 
பொய்த்தூய்மை தேடப்படுகிறது ! 

உண்மையை மடித்து 
முதுகுக்குப்பின் ஒழித்து 
போலிப் புன்னையோடு 
காசோடு காதல்புரி - உன் 
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு ! 

பணக்கார காதல்களுக்கு 
வாயிற்சீட்டும் - ஏழைக் 
காதல்களுக்கு வாய்ப்பூட்டும் 
பட்டுவாடா செய்யப்படுகிறது 
மேலும்சில காரணிகளோடு ! 

எங்கு திரும்பினும் 
முகமதிப்பை மிதித்தபடி 
பணமதிப்பை கேட்கும் 
சமூகம் - எனைத்தள்ளிய 
இடம்தோறும் - எனைப்போன்றே 
பணப் பொறுக்குப் போருக்கு 
பழக்கபடாத முகங்கள் ! 

ஓர் நாள் விடியும் 
என்ற நம்பிக்கையை 
நெஞ்சிலும் - வறுமையை 
முதுகில் சுமந்தபடி 
வானவில் ரசிப்பதெப்படி...? 
நிறைய அழு - கண்ணீர் 
தொட்டு கவிதை எழுது !!! 



Thursday 15 May 2014

கவிதையும் விமர்சனமும் 3




கவிதை      :  காடிழந்த யானைகளின் துயரம்.
எழுதியவர் :  நிஷா மன்சூர்.


மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள் 

விரும்பி வருவதில்லை அவை,
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால் 

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து 

அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை 

நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம் 

நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வாழ்வாதாரத்தை

அவற்றின் பிளிறல்களில் தென்படும்
உணர்வுகளை அறிந்த கானகநேசன்
மனநிலை பிறழ்ந்தவன் போல
கூச்சலிட்டு ஓடுகிறான் 

கலக்கம் மிகுந்து போனதை
கலவி மறந்து போனதை
கானகம் அழிந்து போனதை
காற்று கசந்து போனதை
சோகத்துடன் சொல்கின்றன அவை 


அந்த சிறிய கண்களில் கசியும் கண்ணீர்
உலுக்கி எடுக்கிறது நம்
அயோக்கியத்தனத்தின் மனசாட்சியை 

நம் பேராசையில் விரியும்
மாடி வீடுளில் நசுங்கிச் சிதைகின்றன
அவற்றின் எளிய இருப்பிட நியாயங்கள் 

உங்கள் வீட்டை நசுக்கிச் சென்ற யானை
ரயில் தண்டவாளத்தில் நசுங்கிச்செத்த
குட்டி யானையின் தாயாக இருக்கலாம் 


உங்கள் பயிர்களை அழித்து ஒழித்த யானை
நீங்கள் மின்வேலியில் சாகடித்த
யானையின் தந்தையாக இருக்கலாம் 

உங்கள் வாழைகளை சேதமாக்கியது
நீங்கள் வரவேற்பறையில் அழகுபார்க்கும்
தந்தத்தை அளித்த யானையின் உறவாயிருக்கலாம் 



அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அடுத்த முறை யானைகள் நகரத்திற்குள் புகுந்த
செய்தி படிக்க நேர்கையில்
உணர முயற்சியுங்கள்…
கலவி நிராகரிக்கப்பட்ட
யானைகளின் துயரத்தை…… 

கானகநேசன் இப்போது
உடைகளைக் களைந்துவிட்டு
காட்டுக்குள் உலவிக்கொண்டிருப்பதாய்த் தகவல். 


Thursday 8 May 2014

வராத கவிதை!!


வராத கவிதை!!

வர வர எதுவும் 
தோன்றுவதில்லை எனக்கு.

எதையோ நினைத்து 
எதையோ தொடுத்து
எதையோ விடுத்து
எங்கே நிற்குதோ
என் எழுத்து.

குழப்பக் கயிறுகளின்
இடியாப்பச் சிக்கல்களில்
இணைப்புப் பாலந்தேடி
இங்கங்காய் அலைகிறது
சிந்தனைகள்.

வார்த்தை ஊற்றுக்காய்
தோண்டிய மனக்குழியினின்று
பீறிட்ட இருளருவி
உள்ளம் நிரப்பிச் செல்கிறது.

எதைத் தொலைத்தேனென்று 
எண்ணங்களில் தேடித்தேடியே
எண்ணம் தொலைய
எப்படித் தேடுவதென்று தெரியாமல்
தொலைகிறது மனம்.

எப்படியோ தோன்றிய 
எதோவொன்றும்
விசைமரத்த
விரல்நுனியில்
விழிபிதுங்கி நிற்கிறது.

எழுதுவதற்கு ஏதுமிலாது
அதையே எழுதலாமென
ஆரம்பித்த எனக்கு 
வரவர எதுவும் 

தோன்றுவதில்லை.

















Wednesday 7 May 2014

விக்கிரமாதித்தனும் வேதாளமும்


விக்ரமாதித்தனும் வேதாளமும்

சற்றும் மனந்தளராத 
விக்ரமாதித்தன் -
மீண்டும் வேதாளத்தை,
தொலைத்து விட்டிருந்தான்.

இலவச மிக்ஸி , டிவி
இன்னபிற உபகரணங்களோடு -
இருளடைந்த உலகத்தில்,
வேதாளத்தை தேடுவது 
கடினமாகவே இருந்தது!!.

கால் ஏறி களைத்திருந்த
விக்ரமாதித்தன் கண்களுக்கு,
பச்சை போர்டுகளுக்கு
பின்னுள்ள வேதாளம்
தெரிவதே இல்லை!!.

எரிபொருள் நிரப்பியே
ஏழையான விக்ரமாதித்தன்,
ஷேர் ஆட்டோக்களில் 
குலுங்கியபடி தேடுகிறான்-
சாலைக்குழி வேதாளங்களை!!.

நிலக்கரி வேதாளம் 
அகப்பட்ட மகிழ்ச்சியில்,
காய்கறி வேதாளம்
மறந்து போய்விட்டது,
விக்ரமாதித்தனுக்கு!!.

தான் கடவுளாய் வணங்கும்
கார்ப்பொரேட் வேதாளங்களே,
தன் காசு மதிப்பை
கக்கூஸ் காகிதமாக மாற்றுவது-
விக்ரமாதித்தனுக்கு தெரியவே தெரியாது!!

எப்போதும் சாதி வேதாளமும்,
அவ்வப்போது போதி வேதாளமும்,
மீதி வேதாளங்களை
விக்ரமாதித்தனிடமிருந்து
மறைத்து விடுகின்றன!!.

விக்ரமாதித்தனிடமிருக்கும்
ஒரு விரல் உடைவாளும்,
ஐந்து வருடத்திற்கொரு முறை
ஐநூறு ரூபாய்க்கு,
விலை போகிறது.

இருந்தாலும்,

சற்றும் மனந்தளராத
விக்ரமாதித்தன்-
தினமும் தேடுகிறான்,
தானே தன் முதுகிலேற்றிய
வேதாளத்தை.

Friday 2 May 2014

சிவனுக்கு வந்த சிக்கல்



"சிவனுக்கு வந்த சிக்கல்"

கழுத்தை சுற்றிய பாம்பை
கழற்றி வைத்துவிட்டு -
சிவபெருமான்,
சிந்தித்து கொண்டிருந்தார்.

ஓசோன் உடைத்து 
கைலாயம் புகுந்த,
கழிவுக் காற்று,
காசிநாதனின்
நாசியையும் விட்டுவைக்கவில்லை!!.

ஊரெல்லாம் பெருகிவிட்ட,
ஊர்திகளின் ஓங்காரம்,
உடுக்கொலியையும் தாண்டி
கிழிக்கிறது - அவன்
தோடுடைய செவிப்பறைகளை!!!.

கொண்டைவாழ் கங்கையும்,
சளி முற்றிப்போய்
இருமுகிறாள் - தன்
தொண்டைசூழ் நெகிழிகளால்!!.

அதிவிரைவு ரயிலுக்காய் - தன்
அரசமரத்தை இழந்து,
அநாதையாகிவிட்டேனென்று
அலறுகிறான்,
ஆனைமுகன்!!.

கார்பைடு சுடாத 
பழங்கேட்ட அவ்வைக்காய்,
காயாத கானகத்தே,
கால் கடுக்க தேடும் கந்தன்,
காலம் பலவாகியும் திரும்பவில்லை!!.

கொடிமரத்து நந்திகூட
கோமாரிக்கு பயந்து,
கால்நடை மருத்துவர் தேடி,
கருட வாகனத்தில்
பறந்து விட்டது!!!.

அயர்ந்து போன சிவன்,
ஆதிசக்தியை தேடுகிறான்.

தமிழ்நாட்டின் நிலையறிய,
தனியாகச் சென்ற
சக்தியை தேட,
நெற்றிக்கண் திறப்பினும்,
வெளிச்சம் போதவில்லை!!!.

இத்தனைக்கு பிறகும்,
“என்னை மட்டும் காப்பாற்று”
என்று வேண்டும் பக்தனிடம்,
“முதலில் என்னை நீ காப்பாற்றடா!!” வென்று -
சொல்லாமல் சிரிக்கிறான் சிவபெருமான்.

கழற்றி வைத்த பாம்பு - மீண்டும்
கழுத்தை சுற்ற ஆரம்பித்திருந்தது.

Wednesday 30 April 2014

கவிதையும் விமர்சனமும் 2



கவிதை : இரயில் தேநீர்
எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன்.


அருணோதய ஆரோகனத்தில்
வைகறைத் தீண்டலில்
வசீகரம் வீங்கி
ஆயிரம் மைல்களை அலாவி
அம்மாஞ்சியாய் வந்து கொண்டிருந்தது
ஓர் இரயில்…

அதில் யவ்வனம் கொஞ்சும்
பொன் நிறச் சிதறல்களோடும்
வெண்பகலில் நண்பகலின்
கதகதப்போடும் வரும்
கரம் கரம் சாயாவை
யாரொருவரும்
தட்டிக் கழிப்பதற்கில்லை….

குளிர்வசதிப் பெட்டியில்
முழந் தாழிட்டு
அல்லாவின் காதுகளில்
குழாவி முடித்திருந்த
குரான் குழந்தையின்
தழுவலைக் கடந்து
பக்கத்திலிருக்கும்
இரண்டாம் நிலைப் பெட்டிக்கு
இளஞ்சூடு பரப்பி
பயணித்த பாதையில்

ஒரு சலுகைப் பயணி
ஒரு சிறப்புப் பயணி

ஓர் அரசியல்வாதி
ஒரு வாக்காளர்

ஒரு வயதானவர்
ஒருவயதானவர்

ஒரு மருத்துவர்
ஒரு நோயாளி

ஒரு தொழிலாளி
ஒரு முன்னாள் தொழிலாளி

ஓர் அதிகாரி
ஓர் உண்மை அதிகாரி

ஒரு படித்தவன்
ஒரு படிக்காதவன்

ஓர் இந்து
ஓர் இந்தியன்

ஓர் ஆண்
ஒரு பெண்
ஒரு திருநங்கை

ஒரு மொழிப்பற்றாளர்
ஒரு மதப்பற்றாளர்
ஒரு தேசப்பற்றாளர்

ஓர் ஆத்திகர்
ஒரு நாத்திகர்

ஒரு போராட்டம்
ஒரு போராளி

ஓர் உண்மை
ஒரு பொய்

ஒரு 1100
ஒரு 5s

ஓர் உளறல்
ஒரு கவிதை

என அனைத்தொருவருக்குள்ளும்
வேறுபாடுகளைக் கடந்து
வெப்பத்தோடு வியாபித்து
அடுத்த சமத்துவ மாநாட்டுக்காய்
சலம்பல்களையும்
குலுங்கள்களையும்
பாத்திரத்துனுள் ஏற்படுத்தியபடி
பக்குவமாய் கீழீறங்குகிறது
இரயில் தேநீர்…..


Monday 28 April 2014

கவிதையும் விமர்சனமும் - 1



ஹாய் Friends!!!,

நான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கிற "எழுத்து.காம்"ங்கிற வெப்சைட்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நல்ல கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுற வாய்ப்பு கிடைச்சது. அங்க நான் எழுதுற விமர்சனங்களை, இங்கே உங்களோட share பண்ணிக்கிறேன்.

———————————————————————————

கவிதை : "மணக்கோலம்"
எழுதியவர் : தம்பு

காதோரம்
மெல்லக் கடித்தாள்
எந்தன்
செல்லக் குட்டி....நினைவுகள்
பல சொல்லி.....!!

அவள் அணைப்பில்
அணைந்து போனது
ஆயிரம்
அவஸ்தைகள்....நினைவில்
நின்று கொண்டது
நிம்மதி.....!!

மாலையிட்ட
நிமிஷம்....மறுஜென்மம்
இதுவென்று
மனம்
அமைதி கண்டது....!!

தாலி கட்டி
தாரம்
என்று ஆனதும்.... மனப்
பாரம்
தூரம்
போனதே.....!!

நெற்றி தொட்டு
குங்குமம்
வைத்தேன்.....மனசெங்கும்
பொங்கும்
மகிழ்ச்சிக்கு
அளவேது.....!!

பன்னீரில்
குளித்தோம்.....
பூக்கள் மழை
எனப் பொழிய....
மங்கள இசை
மண்டபம்
நிரப்ப.....
மகிழ்ச்சி வெள்ளத்தில்
நமது உள்ளம்
மணக்கோலம்
கண்டது.....!!


விமர்சனம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றொரு பழக்கப்பட்ட பழமொழி உண்டு. என்னைக் கேட்டால், திருமணங்கள்தான் சொர்க்கங்களை நிச்சயிக்கின்றன. ஒன்றா? இரண்டா?, திருமணங்கள் ஆயிரம் உறவுநதிகள் சங்கமிக்கும் இன்பக்கடல், லட்சம் பனிப்புன்னகைகளை பரப்பும் குளிர்சூரியன், கோடி நட்பு நிலவுகள் சிந்தும் ஏகாந்தப்பேரொளி.  திருமண நிகழ்வு என்பது இரு கனவுச்சொர்க்கங்கள் இணைந்து எழுப்பும் ஒரு நினைவுக்கோவில்.

பொதுவாகவே திருமணங்களைப் பற்றிய எந்த ஒரு பதிவும் பெண்மையை முன்னிறுத்தியே பதியப்படுகின்றன. அதற்கு காரணமில்லாமலில்லை. ஒரு குடும்பத்தேரினை நிலைகுலைவின்றி, மேடு பள்ளத்தடைகளினினால் தடம்பிறழாமல் காக்கும் அச்சாணியாக இருப்பது பெண்மையே. அப்பெண்மையின் மீது தனது முழு நம்பிக்கையை வைத்து, தேரினது இலக்கை நோக்கி சீறிப்பாயவைக்கும் புரவிகளாக இருப்பது ஆண்மை. அந்த ஆண்மை கூறும் பெண்ணின் பெருமையாக, இக்கவிதை சிறக்கிறது.

“அவள் அணைப்பில்
அணைந்து போனது
ஆயிரம் 
அவஸ்தைகள்…நினைவில்
நின்று கொண்டது 
நிம்மதி”

ஆணென்பவனை முழுமைப்படுத்துவது பெண்மை என்பதை இவ்வரிகளின் மூலம் அழகாக நிலைநிறுத்துகிறார் கவிஞர் தம்பு. ஆண், அவஸ்தைகளின் நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவன். அவனுடைய தேடல்களனைத்தும் பெண்மையின் அரவணைப்பெனும் வலி நிவாரணியை நோக்கியே திசைகொள்கிறது. அத்துணை எளிதல்ல, அத்தேடலின் வழித்தடங்கள். ஒரு பெண்மையின் உண்மையான உணர்ச்சிகளெனும் மரவிதைக்கு நீருற்றுபவனுக்கே, அதன் நிழல்சுகம் பாத்தியமாகிறது. அவளுக்குரிய உரிமைகளெனும் தென்றலுக்கு சாளரம் திறப்பவனுக்கே, அதன் அரவணைப்புகள் சாத்தியமாகிறது. இவ்விரு பிறவிக்கடன்களை தீர்ப்பவன் மனதில், அவஸ்தைகள் அணைந்து நிம்மதி ஒளியுறுகிறது.

“மாலையிட்ட
நிமிஷம்.. மறுஜென்மம்
இதுவென்று
மனம் 
அமைதி கண்டது…!!

தாலி கட்டி 
தாரம்
என்று ஆனதும்… மனப்
பாரம் 
தூரம் 
போனதே….!!”

தன் காதலுக்குரியவளிடம், தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொள்ளும் மோட்சநிலையினை கூறும் வரிகளிவை. உறவறிய, உலகறிய நான் இவளுக்குரியவன் என்று மங்கல நாணேற்றி உறுதி கூறும் தருணத்தில், அவனுடைய பாரமிக்க பலவருடப் பொழுதுகள், நொடிகளின் இடைவெளியில் கரைந்து போகின்றன. அவனுடைய பாவங்களின் அந்திமக்காலத்து தீர்ப்பு நாளாக அத்தருணம் மாறி, அவன் மன்னிக்கப்படுகிறான். தன் மனையாளின் முதல் மகனாக மறுபிறப்பெடுத்து, மன அமைதி கொள்கிறான்.

"நெற்றி தொட்டு 
குங்குமம் 
வைத்தேன்.....மனசெங்கும் 
பொங்கும் 
மகிழ்ச்சிக்கு 
அளவேது.....!!" 

நீ எனது உயிராகிவிட்டாய், என் உடலெங்கும் உள்ளோடும் குருதியோடு கலந்துவிட்டாய். நம் குருதிவழி பிரிந்து பிறக்கும் வம்ச விருட்சத்தின் வேராகி விட்டாய். இந்தத் திலகம் அதன் அடையாளமாய், உன் நுதலில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று இரண்டறக் கலக்கும் மகிழ்ச்சிக்கு அளவீடுகள்தான் உண்டோ. 

இந்த வரிகளோடு அந்த மணவறையில் சொர்க்கம் ஒன்று உருவாகிறது. அது, காண்பவர் கண்வழி இதயத்துள் புகுந்து, பூமாரி பொழிகிறது. பன்னீர்த்துளிகளின் வாசம் மங்கள இசையோடு கலந்து, மண்டபத்தை மட்டுமல்லாது, குழுமியிருக்கும் மனங்களனைத்தையும் நிறைக்கிறது.உலகத்தின் இன்பங்களனைத்தும் சரம் சரமாய் தன்னைத்தானே கோர்த்து, மணமக்களெனும் இரு புள்ளிகளை நிரந்தரமாய் பிணைத்து, அலங்கரிக்கும் ஒரு மணக்கோலக் கவிதையாய் உருக்கொள்கிறது.

ஒரு அழகான திருமணக்காட்சியை, இனிமையான எளிமையான வார்த்தைகள் பூட்டி, எதுகைகளால் அலங்கரித்து, உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பரவுகின்ற ஒரு பெருநதியில், நம்மை பிரயாணிக்க வைத்த வகையில், இக்கவிதை சிறப்புப் பெறுகிறது. வாழ்த்துக்கள் தம்பு அவர்களே!!.


எழு!!!



"எழு!!!"


வீழ்ச்சி

இலக்கென நான் நிர்ணயம் செய்த,
அறைக் கதவினுற்கான
ஓட்டப்பந்தயங்களின்
ஒவ்வொரு அடியிலும், 
அந்தகாரத் தடங்களின்,
அகலங்கள் நீள்கிறது.

நொடிகள் நாட்களாய்,
நாட்கள் நாழிகையாய்,
நாழிகைகள் யுகங்களாய்,
காலம் குழம்பிய பெருவெளியாய்
என் வாழ்விடம் மாறுகிறது.

சுவர்களின் வெளிப்பக்கம்
சிரித்துக் கொண்டேயிருக்கும்
வாய்களுக்கான கண்கள்
உள்பக்கம் ஊடுருவ - என் பார்வை
நிலை குத்துகிறது.

சூனியத்தின் சில்மிஷத்தால்,
மனநிலைகள் உறைந்து
மூளைத்திசுக்களில் தீப்பற்றி
நாடி நாளம் நரம்புகளில்
சூடேற்றி பரவ,
நாற்காலிகள் உடைகிறது.

தனிமை உடைக்கும் 
திறவுகோல்கள் - அதன் 
தாழ்வாரங்களில் உள்ளதென
திரித்துக்கூறும் பொய்மனம்,
தரைநோக்கி,
தலைகீழாய் பயணிக்கிறது. 

மேசைகளின் பேச்சில் மயங்கி,
அலமாரிகள் அலங்காரம் செய்ய,
நிலைக்கண்ணாடிகளின் 
எக்காளச் சிரிப்பொலியாய் -
உயிரற்றவைகள் உயிர் பெற,
உயிருள்ளவன் உயிர்
உச்சகட்டத் தனிமையிலிருக்கிறது.

எழுச்சி

இதற்குமேல் இறக்கமில்லை,
இறப்பதால் பயனுமில்லை.
எந்தக் கதவுமே
ஒரு வழிப் பாதையில்லை.
ஏணிகளின் பயன்பாடு
இறங்குவதற் கென்றில்லை.

எண்ணங்களால் 
தீக்குளித்தால்
எத்திக்கும் இருளில்லை.
சிந்தையினால் 
அளக்கப்படின்,
அந்தகாரம் அகலமில்லை.

சூழ்நிலைகளின் 
சிறை உடைத்தால்,
சூனியமென்று எதுவுமில்லை.
தோல்வி தோண்டி 
வெற்றி எடுத்தால்-
ஊரார் வாய் சிரிப்பதில்லை.

திறமைகளை 
மீட்டெடுத்தேன்,
திறவுகோல் அகப்பட்டது.
தனிமையெனும் 
விலங்கறுத்தேன்,
தடங்கள் புலப்பட்டது.

கோபத்தீயை
உரமாக்கினேன்,
புலன்கள் உயிர்பெற்றது.
அன்பொன்றே
இலக்கென்றேன்,
அறைக்கதவின் தாழ் உடைபட்டது.

வெற்றி

கரவொலிகளுக் கிடையில் - நான்
கதவுடைத்து வெளிவருகையில்
எனக்கெனவே காத்திருந்தாற்போல்
அலர்கிறது ஒரு மலர்.



Monday 14 April 2014

நட்சத்திரமாய் நீ...



அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை.

அதிர்ந்து சிரித்துவிடாதே!!..
உடைபேழை வழிவழியும்,
சிரிப்புச் சிதறல்களில் சிக்கிநான் 
சிதைந்துவிடக்கூடும்.

கைவிரித்து, காற்றடைத்து,
விரலிடைப்புகும் 
தென்றலைத் தீயாக்கி,
காதோரம் சூடேற்றும்
ஸ்பரிசங்களின் வழி,
யாருமறியா உன்னிதழ் கூறும்,
யாவருமறிந்த ரகசியங்கள்.

ஓவ்வொரு உதட்டசைவிலும்
மரித்து மரிக்கும் மரித்தல்களினூடே,
யுகங்கள் வாழ்ந்து கழிக்கிறேன் - ஒரு
வண்ணத்துப்பூச்சியின் கனவாக.

கோடிப் பறவைகள் - நிழல் 
தேடிக்களைத்து பின்
வாடி வடித்த நீர்
வழியெங்கும் நிறைக்கும்,
வாட்டும் வெயில் பருவத்தில்,
வந்தெதிர் நிற்கிறாய்,
வானவில் சேலையுடுத்தி - உன்

இருவிழிக்குளிர் படும்,
இமைநிழல் பகுதியில்,
இடம் பிடிக்க கடும் போர்,
இடி, மின்னல், மழைகளிடையே.

உன்னுடல் தழுவி,நிலம் வீழும்,
அலைகேசம் கோர்த்து,
வேய்கிறேன் நம் கூரையை.
உலகக்காதலர் அனைவரின்,
சாபமூட்டை சுமந்து - நம்
கூரைக்குள் குடிவர
காத்திருக்கிறது நிலா.

என்னுயிர் குடிலின் இண்டுகளிலும்,
நிறைந்து, வியாபித்து, விரிந்து,
இறந்த இதயவிளக்குத் திரிதூண்டி,
காதலூற்றி, ஒளியேற்றும்,

நட்சத்திரமாய் நீ.

Saturday 22 March 2014

ஓர் உழவனின் இறுதி விதை




உங்களுக்கு தெரியாதுங்க,

பொட்டுத் தாலி அடகு வச்சு,
எட்டு வட்டி கடன வாங்கி,
விதை தூவி வெளஞ்சதில்ல- எங்க
சதை தூவி வெளஞ்ச துங்க.

மாடு பூட்டி ஏரு ஓட்டி,
காடு நிறய கழனி வெட்ட,
மானம் பேஞ்சு வருசமாச்சு - உழுத
மாடும் கூட விலைக்கு போச்சு.

பள்ளிப் பணத்த புடிச்சு வச்சு,
பம்பு செட்டு மோட்டார் வாங்கி,
வரப்பு வச்சு வெளஞ்சதில்ல - பையன்
படிப்பு வித்து வெளஞ்ச துங்க.

கரைச்சு வச்ச கேப்பைக்கூழு,
கனவுல மட்டும் நெல்லுச்சோறு,
கண்ணீரால பாசனம் செஞ்சோம் - காஞ்ச
வயிரத் தாங்க உரமா போட்டோம்.

கம்மாய் கட்டி கனவ தேக்கி,
வேர்வ தண்ணி ஆறா ஊத்தி,
வரப்பு மறைய, வெளஞ்சது பயிரு,
அறுப்பு முடிய, வளைஞ்சது உயிரு.

ஆசயோட அனுப்புனோங்க ஆலைக்கு - கதிரு
காசா மாறி வருமுன்னு நாளைக்கு.
கூசாம குறைச்சி கொடுக்குறாங்க - விலைய
பேசாம வாங்கிப் போங்குறாங்க.

வம்பாடுபட்டு இது விளைஞ்ச மகசூலு, 
வட்டிபோக மிஞ்சுனது ஒரே ஒரு தாளு,
பச்சபுள்ள பசிக்குகூட இல்லீங்க பாலு - உழச்ச
பாவத்துக்கு பரிசாங்க இந்த பாலிடாலு?

ஊரு திங்க உழைக்கிறோங்க நாங்க - ஆனா
நாங்க திங்க சோறு இல்லையேங்க,
எங்க ஓலம் கேட்டா ஒதுங்கி ஓடுறீங்க,
ஓசி டிவிக்குத்தான் ஓட்டு போடுறீங்க.

ஏரு ஓடி விளைஞ்ச காடு எல்லாம் - இப்ப
காரு ஒட ரோடா மாறுதுங்க.
வேரோட விவசாயி அழிஞ்சா - குழம்பா
தாரையா ஊத்தி தின்னுவீங்க?

மழை தந்த மரத்தையெல்லாம் வெட்டி - மனையா
மாத்தீட்டீங்க முள்ளுவேலி கட்டி - பச்சை
வனத்தையெல்லாம் ப்ளாட்டுகளா மாத்தி - அதுல
வளக்குறீங்க போன்சாயி தொட்டி.

உழவனால உயர்ந்தது இந்த நாடு - உசுரு
உளுத்து போயி கிடக்குதெங்க கூடு.
நட்ட நெல்லுக்கு அலையுதெங்க பாடு
பட்ட மரமாத்தான் போனதெங்க வீடு.

ரத்தத்தை வேர்வையாக்கி விளைஞ்சதெல்லாம் வறுமை,
செத்த பிணத்துக்கும் நடக்காதிந்த கொடுமை.
இன்றோடு மாறவேணும் கேடுகெட்ட நிலைமை- அதற்கு
உழவனுக்கு வேணும் விலைசொல்லும் உரிமை.

Wednesday 19 March 2014

"சனநாயகக் கைகளே!!!"



நிற்காமல் செல்லும் 
பேருந்தைப் பார்த்து,
கெட்ட வார்த்தை சொல்லி
நீளும் கைகள்,

பத்துமாத கர்ப்பிணியையும்
பரதநாட்டியம் ஆடவைக்கும்,
பல்லாங்குழி சாலை கண்டு
தலையிலடித்து
நோகும் கைகள்,

மங்கல்யானுக்கு முன்பே
செவ்வாய் தொட்ட,
விலைவாசியின் 
உயரம் எண்ண,
விரல் போதாமல்
வாடும் கைகள்,

அனுதினமும் செய்திகளில்
அனுமர் வாலாய் நீளும் -
ஊழல் கதைகள் உண்டு
உறங்க மறுக்கும் தலைக்கு,
அமிர்தாஞ்சனம்
தடவும் கைகள்,

சிறுதொழிலின் வயிற்றலடித்து,
சீமைக்கம்பெனிகளுக்கு 
முந்தி விரிக்கும்,
அக்னி நட்சத்திர நண்பகலையும்
அரையிருட்டாய் மாற்றிவைக்கும்-
மின்வெட்டை தோற்கடிக்க,
மெழுகுவர்த்தி
தேடும் கைகள்,

ஊரெங்கும் லஞ்சமென்று,
ஒப்பாரி வைத்து,
ஓலமிட்டு,
தனக்கென்று வந்தால் மட்டும், 
தலையைச் சொறியும்,
அத்தனை கைகளும்,

வாக்குப்பதிவு நாளன்று,
வரிசையிலேதான் நின்று,
ஓட்டை அமுக்காமல் - வீட்டு டிவி
ரிமோட்டை அமுக்குவதும்
ஏனோ?..

Monday 17 March 2014

தென்காசிக்காரப்பய!!!...



மருதையில, காலேசுல நான் படிச்சிட்டு இருக்கையில, என் பங்காளி ஒருத்தன் இருந்தியான், தென்காசிகாரப்பய.. கருவண்டு கலருல, பாக்க பழமாட்டாம் இருப்பியான், ஆனா சரியான கோட்டிக்காரன். அவன் செஞ்ச அலப்பறை ஒன்னதான் இப்ப சொல்லப்போறேன், நல்லா சுவாரஸ்யமா இருக்கும். ஆறாவது செமஸ்டரோ, ஏழாவதோ சரியா தெரில.. அதிசயமா நான் அன்னிக்கு வகுப்புக்கு போயிருந்தேன்.

எங்க ஹெச்சோடி வகுப்பு. கட்டடத்துக்கு கம்பி எவ்ளோ போடறது, எப்படி போடனுங்கறத கணக்கு பண்ற பாடம். எங்க ஹெச்சோடி இருக்காரே, எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருப்பாப்ல, பாவம் , சர்க்கர வியாதிக்காரரு.. ஒரு நாளைக்கு அம்பது தடவ , ஒண்ணுக்கு போயிட்டு வருவாரு, சில சமயம் , எங்களுக்கு எது ஹெச்சோடி ஆபீஸுன்னே குழம்பிரும். ஆனா , நல்ல மனுசன்.. நாங்க என்னதான் கிறுக்குத்தனம் பண்ணாலும் கண்டுக்கிட மாட்டாரு. பாசக்கார புள்ள.

அட, பாருங்க , சொல்ல வந்தத சொல்லாம, சுத்தி வளச்சிட்டு இருக்கேன்.  அன்னிக்கு நம்ம ஹெச்சோடி, இன்னிக்கு எப்படியும் பத்து கழுத்தையாவது அறுத்துப்புடனும்னு குறியா பாடம் நடத்திட்டு இருந்தாப்ல. போர்டுல புரியாத பாசையில, என்னென்னமோ குறி போட்டு, அஞ்சும் நாலும் எப்படி பத்தாகும்னு கருத்தா சொல்லி குடுத்திட்டு இருந்தாரு. நம்மாளு, அதாங்க , தென்காசிப்பய.. முத பெஞ்சில உக்காந்துகிட்டு,முழு வீச்சா குறிப்பெடுத்துகிட்டு இருந்தான்.

ஆமாங்க, அவரு எப்பவுமே முத பெஞ்சுல தான் உக்காருவாரு.. பெரிய படிப்பாளி, அறிவாளின்னு கோக்கு மாக்கா எதுவும் நெனச்சிகிடாதீங்க. ஆளு கட்ட, அம்புட்டுதேன். இந்த சினிமா நடிக சினேகா படம் போட்ட நோட்டு ஒண்ணு வச்சிருப்பான். இந்த ஒத்த ரோசாவ வச்சிகிட்டு, தாவணியில, ஓரக்கண்ணால, ஒருக்களிச்சிட்டு பாத்துட்டு இருக்குமே, அதே படம்தான். எழவு , எல்லா பாடத்துக்கும் அந்த ஒரு நோட்டுதேன், நாலு வருசமும் அதே படந்தேன். நாதாரி, வகுப்புக்கு மட்டம் போட்டாலும் போடுவானே, ஒழிய, வேற படம் போட்ட நோட்டுல குறிப்பெடுக்க மாட்டான்.

பயபுள்ள பன்னென்டாப்பு வரைக்கும் தமிழ்ல தான் படிச்சிருக்கான். இங்க வந்து இங்கிலீசுல, தலகாணி சைசுல புஸ்தகங்களை பாத்தவுடனே , மாப்ளைக்கு நாக்கு தள்ளிருச்சி. இருந்தாலும் வுடமாட்டான், மல்லுகட்டி படிப்பான். படிப்பானா, சும்மா உக்காந்துருப்பானான்னு தெரியாது, ஆனா எந்நேரமும் , புக்கும் கையுமா தான் இருப்பான். வா மாப்ள, நான் சொல்லித்தரேன்னாலும் கேக்கமாட்டான். நானா படிச்சாதேன் மனசுல நிக்கும்பான். ரொம்ப கஷ்டப்பட்டு , வயக்காட்டு வேல பாத்து படிச்சு, மெரிட்ல கவர்ன்மெண்ட் காலேசுல சீட்டு வாங்கினவன்.

அட, திரும்பவும் பாருங்க, சுத்த ஆரம்பிச்சிட்டேன். பழைய நினைப்புல, அதான் , அப்பிடியே புடிச்சி இழுத்துட்டு போயிடுது.
கதைக்கு வருவோம். இந்நேரத்துல , எங்க ஹெச்சோடி, போர்டு முழுக்க நிறைச்சிட்டாரு.. ஒரே கோடும் , எழுத்துமா இருக்கு, ஒரு மண்ணும் புரியல. நான் பேனாவை தூக்கி போட்டுட்டு, சன்னல் வழியா, குரங்குகளை வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டேன். பக்கத்துல இன்னொரு பங்காளி , கண்ணாலயே கூடப்படிக்கிற புள்ள கூட காதல் வளக்க ஆரம்பிச்சிருந்தான். ஆனா நம்மாளு விடலயே. சினேகாவுக்கே வலிக்கிற மாதிரி பக்கம் பக்கமா குறிப்பெடுத்துகிட்டு இருந்தான்.

எங்க ஹெச்சோடிக்கு ஒரே ஆச்சரியம். என்னடா , சாதரண நாள்லயே தூங்கிறுவான், இன்னைக்கி என்னடான்னா.. இப்படி எழுதுறானேன்னு. அப்புடியே அவன் பக்கத்தால் போயி நின்னாரு. நம்மாளு அத கவனிக்கல, பரீச்சையிலை கூட அப்படி காப்பி அடிச்சுருக்க மாட்டான், பக்கம் பறந்துட்டே இருந்தது. ஹெச்சோடி அவன் தோள்ல தொட்டு, "தம்பி, இன்னும் எத்தன பேப்பர் இருக்குப்பா"ன்னாரு. அவன் அவர நிமிந்து பாத்துட்டு , கட கடன்னு, சினேகா நோட்டுல இருந்த காலி பக்கத்த எண்ணி , " இன்னும் நிறைய இருக்கு சார்"ன்னான்.

என்ன ஆச்சி, ஏது ஆச்சின்னு தெரியல, எங்களுக்கு எதுவுமே புரியல. ஹெச்சோடி, வயித்த புடிச்சிகிட்டு , வகுப்பே அதிருர  மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. எங்களுக்கு சிரிக்கிறதா, இல்ல சும்மா இருக்குறதான்னு தெரியல. இவரு இப்படி சிரிச்சி, இவரு பொண்டாட்டியே பாத்துருப்பாங்களன்னு தெரியல.. அப்புறம் தான் , அவரு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டு…"தம்பி, நான் பேப்பர்னு சொன்னது , அரியர்ஸைப்பா, நோட்டுல இருக்குற பேப்பரில்ல"ன்னாரு. அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு.. அப்புறமென்ன, நாங்க சிரிச்ச சிரிப்புல திருப்பரங்குன்றத்து குரங்குகளே பயந்திருக்கும் போங்க.