நீங்க எத்தன பேரு திருப்பரங்குன்றம் மலைய பாத்து இருக்கீங்க.. தூரத்திலேந்து பாக்கையில திண்டுக்கல்லு , குண்டுக்கல்லாட்டம், ஒத்தக்கல் மலை மாதிரி இருக்கும். மொட்ட மலை. அவிச்ச முட்டைய பாதியா வெட்டி , கவுத்து வச்சா எப்புடி இருக்கும், அது மாதிரி ஒரு சேப்பு. கீழ முருகன் கோயிலு.. மேல ஒரு மசூதி, மொத்தமா ஒரு சமத்துவ மலை. பல பேரு அந்த மலைய பாத்துட்டு அசந்து போயி, பக்கத்துல ஒரு குட்டி மலை ஒண்னு இருக்கும், அத பாக்க மாட்டாங்க. அத மலைன்னுஞ் சொல்ல முடியாது, பெரிய மேடுன்னுஞ் சொல்ல முடியாது, நடுவால ஏதோ ஒண்ணு. அந்த மேட்டு அடிவாரத்துலதேன் எங்க காலேசு. நான் எங்க காலேசுக்குள்ள அதிகமா போனதில்லங்கிறதால, அந்த மேட்டைப் பத்தியே சொல்லுதேன். ஏன்னா, அங்க தான் இந்தக் கதை ஆரம்பிக்குது.
………………………………………….
மாப்ள, வேணாம் மாப்ள, சொன்னாக் கேளு , போயிடுவோம்.
யேலேய் , இரப்பா, இன்னும் கொஞ்ச நேரந்தேன் , உண்மையா, பொய்யாண்ட்டு பாத்துபுட்டு போயிடுவோம்.
டேய் , அரக்கிறுக்கா, ஊர்க்காரய்ங்க எதாச்சும் சொல்றாய்ங்கன்னுட்டு, ராத்திரி நேரத்துல, இங்க வந்துகிட்டு. பாம்பு , பூரான் எதாவது கடிச்சிரப்போவுதுடா.
மாப்ள, அம்புட்டு வெவரமில்லாயா நான் வருவேன், காளியண்ணன் கடையில விசாரிச்சிட்டு தாண்டா வர்றேன். பொறுடா, இன்னம் கொஞ்ச நேரந்தேன்.
போடா இவனே, நா கெளம்புரேன், அப்புறம் வீட்டுக்கு பஸ்ஸு கிடைக்காது.
.
.
.
டேய்ய், டேய் "ஒபுசு", நில்லுடா!, அது வந்துருச்சிடா!!, திரும்புடா!!!.
-----------------------------------------
அந்த மேட்டப் பத்தி அப்புறம் சொல்றேன், இப்ப இந்த "ஒபுசு"ங்கிறவனைப் பத்தி சொல்லியாகனும். ஆளு மதுரக்காரன், அப்பா பேங்க் மேனேசரு, சிம்பு ரசிகன். அவனுக்கு எப்படி "ஒபுசு"ன்னு பேரு வந்ததுன்னு யாருக்கும் தெரியாது, எழவு , அதுக்கு என்ன அர்த்தம்னும் தெரியாது. ஆனா எப்படியோ அது ஒட்டிகிச்சி. ஆளு ஒரு மாதிரி வித்தியாசமானவன். நாமெல்லாம் ஒரு வேலைய நெனச்சி பயந்தோம்னா, என்ன பண்ணுவோம்?, முடிஞ்ச வரைக்கும் அத செய்யமாட்டோம். ஆனா , இவன் அப்படியில்ல, இத செஞ்சா என்ன ஆகுமோன்னு பயந்துகிட்டே , அத செஞ்சிருவான். வீட்டுக்கு தாமசமா போனா அப்பா வைவாரு, வைவாருன்னு கழிஞ்சிகிட்டே, திருநகர்ல முத ஆட்டம் படத்துக்கு போக டிக்கட் வாங்கிட்டு வந்துருவான். அவன் இந்த மாதிரி ஒரு மேட்டர, பக்கத்து லேடிஸ் காலேசுல பண்ணி , நாங்க அஞ்சி நாள் சஸ்பெண்டு ஆன கதயெல்லாம் இருக்கு. சரியான கூறு கெட்டவன். அவன் பாட்டுக்கு வீட்டுக்கு போறவன போயி நம்மாளு பேயி வந்துருச்சினு சீண்டி விட்டா என்ன ஆகும்?….
-----------------------------------------------
மாப்ள, என்னடா சொல்ற?, வந்துருச்சா?, வேணாண்டா!, எங்கடா பாத்த?, பயமா இருக்குடா!, அது எப்படி இருந்துச்சி?
மேல அந்த ஒத்த மரத்துக்கு பின்னாடி தாண்டா பாத்தேன், வெள்ள சேல மாப்ள!, ரோசாவேதான்!!.
டேய், அளக்காதடா, அந்த ரோசா செத்து முப்பது வருசமாச்சி, நீ என்னமோ நேத்து பாத்த மாதிரி அவளேதாங்குற.
நம்பலல்ல நீயி, வா மேல போவோம். போயி அதுகிட்டயே கேப்போம்.
டேய்!!, நீ என்னடா, எதோ போன் பேசுற மாதிரி பேயிகிட்ட பேசுவோங்கிற.. சொல்றதக் கேளு , பசிக்குது, போயிருவோம்.
வேணான், வேணான்னு சொல்லி, நீதான் முன்னுக்க பொயிட்டுருக்க.. …. இரு .. நில்லு.. என்னடா பாட்டு சத்தம் கேக்குது..
டேய்ய்ய்!!!!!… அந்த ஆட்டக்காரி ரோசா ஆட ஆரம்பிச்சிட்டாடாஆஆ!!!!..
------------------------------------------
இந்த திருப்பரங்குன்றத்துக்காரய்ங்க இருக்காய்ங்களே, சரியான சாரிசோக்கருங்க… மார்கழி, கார்த்திகை, அய்யப்ப சீஸன் , எது வந்தாலும், பயபுள்ளக சாமி கும்பிடுறாய்ங்களோ இல்லியோ, நெதம் ராத்திரி, பாட்டு கச்சேரி, டப்பா டான்ஸூன்னு , கூத்து கட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நான் படிக்கிறப்பயே இப்படின்னா, முப்பது வருசத்துக்கு முன்னாடி சொல்லவே வேணாம். அப்படி ஒருக்கா, ஆட வந்தவ தானாம் இந்த ரோசாங்கிறவ… அப்பல்லாம் அவுக பேரு , பெத்தப் பேராம். ஆட வந்தவள சும்ம விடாம, மேல் சாதிக்கார பய ஒருத்தன் விரும்பித் தொலச்சிபுட்டானாம். நாளுங்கெழமயுமா வளந்த இவங்க லவ்ஸு, ஒரு நா ஊருக்கு தெரிஞ்சிரிச்சாம்.. அப்புறம் என்ன, மறு நா, இவ , மேட்டு மரத்துல தொங்குறாளாம்.. அவன் ஊர்க்கிணத்துல மிதக்குறானாம். அப்புறம் என்ன, கன்னிப்பொண்ணு அநியாயமா செத்துப்போனதால, ஆவியா அலயுறா, சின்னப் பசங்கள புடிக்கிறான்னு கத முப்பது வருசமா ஒடிக்கிட்டு இருக்கு. இவிங்களும் அத நம்பி அன்னிக்கு மேட்டுக்கு போயிட்டு, பேயடிச்சா மாதிரி ரூமுக்கு திரும்பி வந்தாய்ங்க.. எனக்கு ஒன்னும் புரியல, அப்பதான் நான் கேட்டேன்..,
---------------------------------------------------
அப்புறம் என்னடா ஆச்சி?
ஒரே கிலியா போயிடிச்சிறா எனக்கு!..
துளிக்காத்து கூட அடிக்கல,
லேசா யாரோ முனகுறா மாதிரி பாட்டுச்சத்தம்,
எனக்கு, செத்துப்போன என் பாட்டி ஞாபகமெல்லாம் வந்துரிச்சி!!.
இந்த லூசு என்னடான்னா, அம்புட்டு நேரம் ,
வீட்டுக்கு போவனும் சொல்லிட்டு இருந்தான்,
இப்ப அவன் பாட்டுக்கு மேல ஏறிப்போயிட்டுருக்கான்!.
எனக்கு திக்கு திக்குனு இருக்கு!!.
மாப்ள, கும்மிருட்டுறா!,
அந்த ஒத்த மரத்த பாத்துருக்கல்ல நீயீ!…
ஒரு எல கூட ஆடலடா!!!..
என்னால அதுக்கு மேல ஏற முடியலடா!,
புதறு, கல்லு கில்லுல்லாம் கால தடுக்குது!..
விலக்கி வுட்டுட்டு , நிமி...ந்து பாத்….தா!!!,
இந்த நாதாரிய காணமுடா!!!!..
எனக்கு வெளிக்கே வந்திருச்சிடா!!!….
அய்யய்யோ, வீட்டுக்கு ஒத்த பயல,
கூட்டு வந்து தொலைச்சிபுட்டோமேன்னு
வவுத்தை கலக்கிரிச்சி!!!.
பாட்டுச்சத்தம் நிக்கவே இல்ல!…
வார்த்தை எதுவும் இல்ல!,
ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ன்னு முனகுற சத்தம் மட்டுந்தான்.
எனக்கு ரோசா முனகுறாளா?,
இல்ல இந்த ஒபுசு முனகுறானான்னே புரியல!!..
இப்ப இவன் இல்லாம வுட்டுட்டும் வரமுடியாது….
சரி வேற வழியில்லன்னுட்டு , மே..ல. ஏறப்…பாத்தா!!..
பாட்டு சத்தம் நின்னுருச்சிடா!!!..
மரத்தடியில இருந்து…
புசு புசுன்னு வெள்ளையா,
புக வருது மாப்ள!!!..
எனக்கு மேல ஏறவும் பயம்,
"ஒபுசு - எங்கடா இருக்க"ன்னு கூப்புடவும் பயம்,,
அல்லு கெளம்பிருச்சு மாப்ள.
ஒரு வழியா மரத்துகிட்ட போயிட்டேன் மாப்ள..
புக சாஸ்தியாயிட்டே இருக்கு..
குடல புரட்டுறா மாதிரி ஒரே வீச்சம்,
இரும வர்றா மாதிரி இருக்கு..
வாந்தி வர்றா மாதிரி இருக்கு..
ஆனா பயத்துல எதுவுமே வரல மாப்ள!!
"உஸ்ஸ்.. சும்மா இரு"ன்னு..
ஒரு சவுண்டு மாப்ள.. பாத்தா!!
இந்த விளங்காதவன் , என் காலுக்கு கீழ
படுத்துக்கிட்டு , "வா.. நீயும் வந்து படு"ங்கிற மாதிரி
சைகை காட்டுறான்.
எனக்கு செம கடுப்பாயிருச்சி..
பரவால்லன்னுட்டு கூட படுத்தேன்..
"மாப்ள ., இங்க பாரு"ன்னுட்டு.. ஒரு பெரிய கல்ல எடுத்து
மரத்தடியில வீசிட்டாண்டா!!!
"டேய்ய் .. எந்த ……………….ண்டா கல்லடிக்கிறது" ன்னு
பெருசா ஒரு பொம்பள வாய்ஸூடா!!!!!..
எனக்கு பேச்சே போயிடுச்சி..
நாத்தம் வேற தாங்கல..
"ஆம்பளயின்னா முன்னாடி வாங்கடா"
திரும்பவும் சத்தம்….
மாப்ள .. போயிரலாம்டான்னு சொல்றதுக்குள்ள
இந்த கிறுக்குப் பய .. எந்திருச்சி..
மரத்த தொடுற அளவுக்கு போயிட்டான்!!!..
நாம இன்னிக்கி பாடிதான்னு முடிவாயிருச்சி..
கடசியா ஒரு பேயப்பாத்துட்டு போயிரலாமேன்னு
முடிவு பண்ணி.. நானும் போனேன்..
மாப்ள.. சொன்னா நம்ப மாட்ட..
அங்க மரத்தோட மரமா சாஞ்சிகிட்டு..
வெள்ள சேலயில.. கண்ணுல்லாம் மேல குத்திகிட்டு..
ஒரு கிழவி.. கையில சுருட்டோட..
"தம்பி.. பொட்டலம் வாங்க வந்தீகளா?
அதுக்கு எதுக்கு கல்ல கொண்டு அடிச்சீங்க..
எத்தன வேணும்?
ஒண்ணு இருவது ரூவாதேன்"னு
போட்டாளே ஒரு போடு…
அடப்பாவிகளா…. கன்னி ஆவியை பாக்க போறேன்னுட்டு போயி.. கஞ்சா கிழவியை பாத்து பயந்துருக்கீங்களேடா..
அந்த ஒபுசு நாயி.. அதுக்குத்தான் என்கிட்ட இருவது ரூவா வாங்கிட்டு ஓடுனானா.. நான்கூட பஸ்ஸுக்குதான்னு நெனச்சேனடா…
------------------------------------------------------------------
பி.கு: மறுநாள், பக்கத்து வீட்டு பொட்டிக்கட அக்காகிட்ட கேட்டப்ப தான் தெரிஞ்சிது.. இந்தக் காளியண்ணன் , புதுசா காலேசுக்கு எந்த பயலுவ வந்தாலும், இந்த ரோசாக்கதைய சொல்லி தூண்டி விடுறதுன்னு…
நம்ம ஒபுசு, இப்ப கஞ்சாலாம் அடிக்கிறதில்ல.. சென்னையில ஒரு பெரிய கம்பெனில "மார்க்கெட்டிங் மேனேஜர்".
அந்த கஞ்சா கிழவி , இந்த சம்பவம் நடந்து ஒரு வருசத்தில செத்து போயிடுச்சி.. நம்ம காளியண்ணன் , இப்பல்லாம் இந்த கதயை யார்ட்டயும் சொல்றதில்ல.. ஆனா, ஊருக்குள்ள பல பேரு ராத்திரி நேரத்துல , மேட்டுப்பக்கம், கஞ்சா கிழவிய பாத்ததா பேசிக்கிறாய்ங்க.. கத தொடருது..
போஸ்ட்டும் நீயே போட்டு, கமெண்டும் நீயே எழுதி, ஈஸ்வரா!!., யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?
ReplyDeleteNice Story..Good Comedy..
ReplyDeleteTry writing Crime Stories..
thanks friend.. will try to write crime.. Do read my other posts and comment.
Delete