Wednesday, 18 June 2014

கவிதையும் விமர்சனமும் 6 - என் கிராமம்



கவிதை : என் கிராமம்
எழுதியவர் : நுஸ்கி

பன மர காடு
தென்னங் கீற்று வீடு
களிமண் தரை
தலை தட்டும் கூரை

முற்றத்தில் தக்காளி
சிவந்த குடை மிளகாய்
கர்ப்பணியான கத்தரி
கனத்துப்போன வெண்டக்காய்

தொலை தூரம்
ஒற்றைவழி பாதை
வெப்பமேற்றும் உச்சி வெயில்
காற்றுக்கு ஆடும் வேப்ப மரம்
அதில் தொங்கும் தேன் வதை

சுத்தமான கற்று
அதில் இணைந்த குயிலின் ஓசை
குருவியின் சத்தம் மூலிகை வாசம்
முற்றம்மெங்கும்
கொடி மல்லிகை படரும்

அத்தி மரம் பூக்கும்
ஆலமரம் காய்க்கும்
ஆத்தோரமாய் நிற்கும்
மா மரம் இனிக்கும்

பச்சை நிறம் வயல் காட்டும்
வெண்ணிறமாய் மாட்டுப்பால் இருக்கும்
செந்நிற மண்ணில் நெல் மணி
செழித்து தூங்கும்

இத்தனையும் இருந்த மண்ணில்
இன்றைக்கு அடுக்கு மாடி
இத்தனையும் காட்டும்
ஒரு சதுரடி தொலைகாட்சி பெட்டி

விமர்சனம் : 

சதாசர்வகாலமும் சரசரத்துக்கொண்டேயிருக்கும் பக்கத்து உணவுக்கூடாரத்து சீனர்களின் ரீங்காரத்தையும், பரத்துபரத்துக்கொண்டேயிருக்கும் நெடுஞ்சாலை ஊர்திகளின் ஹார்ன்காரத்தையும், எதிரேயுள்ள தொடக்கப்பள்ளி குழந்தைகளின் ரைம்ஸ் ராகமாலிகாவையும் ஜன்னலுக்கு வெளியே வைத்து பூட்டிவிட்டு நிசப்தம் பூண்ட எனதறையில் அமர்கிறேன் இந்தக்கவிதையின் ஒலியோடு சிலகாலம் சஞ்சரிக்க.

எல்லா கிராமங்களும் எதோவொரு தார்ச்சாலையின் முடிவிலேயே தொடங்குகிறது. வேம்பும் அரசும் காவல்காக்க இருபுறமும் பசும் வயல்வெளி போர்த்திய , ஒற்றை மாட்டு வண்டியின் அகலமே உள்ள ஒரு புழுதி பறக்கும் செம்மண் பாதையே அனைத்து கிராமங்களுக்குக்கான தொப்புள் கொடியாக உள்ளது. அந்த செம்மண் பாதையில் நூறு அடிகளை கடக்கும் முன்னரே ஏதாவதொரு பனந்தோப்பை கண்டுவிடலாம். 

அந்த பனங்காட்டிலிருந்தே கவிதையுடனான பயணத்தை துவக்குகிறேன். சிறு சிறு வரிகளாய் செல்லும் கவிதை, கிராமத்தின் சிறப்புகளை அடுத்தடுத்து அடுக்கும்போது எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை இழந்திருக்கிறேன் என்பதை நினைவூட்டுகிறது.

கேட்பதற்கும் காண்பதற்கும் மிக எளிமையாக இருக்கும் கிராமத்து குடிசைகள் தரும் இன்பங்களுக்கு அளவில்லை. பட்டணத்து வீடுகளிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவருக்கு "தலை தட்டும் கூரை" என்ற வரியே தலைவலி தரக்கூடியது. சம்மணமிட்டே உட்காரத்தெரியாத தற்போதைய தலைமுறைக்கு உயரம் குறைவான தலைவாசலுக்கு பின்னுள்ள தத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வழிவழியாக, வம்சத்திற்கும் நிழலளித்து வாழ்வளித்து காக்கும் வீட்டிற்கான மரியாதையை அதற்குள் நுழைகின்ற ஒவ்வொரு முறையும் தலைவணங்கி செலுத்துவதற்காகத்தான் தலைவாசல்கள் உயரம் குறைவாக வைக்கப்பட்டன. 

கடுங்கோடையிலும் குளிர்ச்சி தரும் களிமண் தரை, எப்படிப்பட்ட சூரியக்கதிரையும் அனுமதிக்காத இறுக்க வேய்ந்த தென்னங்கீற்று கூரை என கவிஞர் கிராமத்து வீட்டை ஆராதிக்கும் போது , ஒரு நிமிடம் மின்சாரம் தடைப்பட்டாலும் ஆயிரம் சதுரஅடி அடுப்பாக மாறிவிடும் நகரத்து வீட்டு வாழ்க்கை வேதனைகளும் மறந்துதான் போகிறது.

நாசி துளைத்து நாவூரச்செய்யும் அற்புத மணம் ஒன்று வேப்பமரத்து குளிர்காற்றேறி வருகிறது. ஊருக்கு வெளியே எங்கோ உழுது கொண்டிருக்கும் கணவனுக்கு தனது சமையல் மணத்தாலேயே பசிக்க வைத்து விடுகிறாள் கிராமத்து மனைவி. முற்றத்து தோட்டத்திலேயே காய்த்து தொங்கும் காய்கறிகள் அப்போது பறிக்கப்பட்டு அப்படியே சமைக்கப்படும்போது அரோக்கியத்தைப்பற்றிய எந்தக் கவலையுமில்லை. 

சிவந்த தக்காளி , கர்ப்பிணி கத்தரி, கணத்த வெண்டை என கவிஞர் அடுக்குகையில் நெகிழிப்பைகளுள் அடைபட்டு குளிர்சாதனப்பெட்டிக்குள் சிறைபட்டு அஜீரணத்தை உண்டாக்க காத்திருக்கும் நகரத்து காய்கறிகள் நினைவுக்கு வருகிறது.

ஒற்றையடிப்பாதைகளும், வேப்பமரமும் இல்லாத கிராமங்களை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. செட்டி வீட்டு வட்டிக்கணக்காக நீண்டு கொண்டே செல்லும் ஒற்றையடிப் பாதைகளின் முடிவு பெரும்பாலும் குளக்கரையாகவோ கண்மாய்க்கரையாகவோதான் இருக்கும். தவளைதாவும் தாமரைக்குளம், காற்றிலாடும் குளக்கரை மரங்கள் , அதன் கிளையில் ஆடும் தேன்கூடு, அதன் நிழலில் மேயும் ஆட்டு மந்தை , அவற்றை மேய்த்துக்கொண்டே தன் களைப்பு மறக்க கானம் பாடும் இடையர்கள் என ஒன்றன் பின் ஒன்றாக இந்தக் கவிதையின் வரிகள், கிராமத்து ஆனந்தங்களை  எண்ணங்களில் பிணைத்துக்கொண்டே செல்கிறது.

இனம்புரியாத சுகங்கள் ஒன்றொன்றாய் அடுத்தடுத்து தாக்கி சிறிது சிறிதாய் மனதிற்கு சிறகு பொருத்தி வானில் ஏற்றுகையில் கவிதையின் இறுதி வரிகளில் அதுவரை நாம் இயற்கையாக அனுபவித்து வந்த அனைத்து இன்பங்களும் இன்று ஒரு சதுர அடி தொலைக்காட்சிப்பெட்டிக்குள் செயற்கையாக மாறி வரும் அதிர்ச்சியைக்கூறி நிறைவு செய்கிறார் கவிஞர். எங்கோ உயரே, மேகங்களுக்கு இடையே பல வண்ணப் பறவைகளோடு ஆனந்தமாய் பறந்துகொண்டிருந்த மனது , தடாரென தரைக்கு வருகிறது.

மாட்டுவண்டிகள் மணிச்சத்தத்தோடு உருண்டோடிய செம்மண் பாதையில் , பலவகை மனிதர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளை வான்கள் பறக்கிறது. பசும் வயல் வெளிகள் அனைத்தும் மனைகளாக பிரிக்கப்பட்டு , ஏதோவொரு "நகர்" எனப் பெயர் வைக்கப்பட்டு வான் பார்த்து வறண்டு போய் கிடக்கிறது. தென்னங்கீற்று கூரையிழந்த குடிசைவீட்டு களிமண் தரைகள் வெப்பப்பாளங்களாய் வெடித்துக் கிடக்கிறது. பறித்து சமைக்க ஆளில்லாமல் கத்தரி அனைத்தும் கருக்கலைந்து செடிகளிலேயே கருகுகிறது. கடைசி வேப்பமரமும் நெடுஞ்சாலைக்காக வெட்டப்பட்டு விட்டது. புதர் மண்டிய ஒற்றையடிப்பாதை தொடங்கியவுடனேயே முடிந்து போனது. குளம் இருந்த தடம் தெரியவில்லை. குளிர் காற்றை காணவில்லை. இடையன் என்றோ இசைத்து விட்டுச் சென்ற கானமொன்று பெரும் மெளனஓலமாய் காதைக்கிழிக்கிறது. எத்திசை காணினும் நகரமயமாக்கல் எனும் பெருங்கோர அரக்கனால் ஒட்டு மொத்த உயிரும் உறிஞ்சப்பட்டு உமிழப்பட்ட மிச்சமாய் கிராமம் செத்துக்கிடந்தது. 

எந்தவொரு உந்துதலுமின்றி அறை ஜன்னல் கதவை திறக்கிறேன். கிராமத்து இன்பங்களனைத்தையும் நேரடியாக கண்டனுபவித்த கடைசி தலைமுறையாய் நாமாகி விடுவோமோ என்ற கவலை , ஆயிரம் பாவமூட்டைகளுக்கான பாரத்துடன் மனதை அழுத்த, நரக(நகர)வாழ்க்கையில் கலந்து தொலைந்து போகிறேன்.

No comments:

Post a Comment