Sunday, 25 May 2014

கவிதையும் விமர்சனமும் - கண்ணீர் தொட்டு கவிதை எழுது



கவிதை : கண்ணீர் தொட்டு கவிதை எழுது
எழுதியவர் : வினோதன்

குருதிக்குடுவை நிறைய 
பெருங்குணம் சுமந்தபடி 
சமூகம் நோக்கினேன், 
தட்டிவிட்டபடி - கையில் 
சாக்குப்பை திணித்து 
பணம் பொறுக்கும்படி 
பரிவின்றி பணிக்கப்பட்டேன் ! 

உயர்கல்வி உடுத்தி 
தெரு கடக்கும்போது 
அழுத்தமாய் சிரித்தது 
அழுக்குச் சமூகம் - நீ 
யாரென்பதை - நின் முகம் 
தவிர்த்து - பண முகாமே 
தீர்மானிக்கும் என்றபடி ! 

என் திறமைகளை 
அளவீடு செய்ய மறுக்கும் 
செவிட்டு உலகம் 
செருப்பை உற்றுநோக்கி 
என்னை கணிக்கிறது ! 

ஏறி-இறங்கிய உடுப்பற்ற 
நான் - ஏற-இறங்கவே 
பார்க்கப் படுகிறேன் - என் 
அழுக்கற்ற அகம் பொசுங்க 
பொய்த்தூய்மை தேடப்படுகிறது ! 

உண்மையை மடித்து 
முதுகுக்குப்பின் ஒழித்து 
போலிப் புன்னையோடு 
காசோடு காதல்புரி - உன் 
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு ! 

பணக்கார காதல்களுக்கு 
வாயிற்சீட்டும் - ஏழைக் 
காதல்களுக்கு வாய்ப்பூட்டும் 
பட்டுவாடா செய்யப்படுகிறது 
மேலும்சில காரணிகளோடு ! 

எங்கு திரும்பினும் 
முகமதிப்பை மிதித்தபடி 
பணமதிப்பை கேட்கும் 
சமூகம் - எனைத்தள்ளிய 
இடம்தோறும் - எனைப்போன்றே 
பணப் பொறுக்குப் போருக்கு 
பழக்கபடாத முகங்கள் ! 

ஓர் நாள் விடியும் 
என்ற நம்பிக்கையை 
நெஞ்சிலும் - வறுமையை 
முதுகில் சுமந்தபடி 
வானவில் ரசிப்பதெப்படி...? 
நிறைய அழு - கண்ணீர் 
தொட்டு கவிதை எழுது !!! 





விமர்சனம் - ஈஸ்வரன் ராஜாமணி


பணம். இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் விரிக்கும் மாயவலையில் சிக்காத மனிதர்களை காண்பது அரிது. ஓரடியில் துவங்கி ஆறடியில் முடியும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் பணத்தை துரத்துகிறது. அகண்ட உலகத்தின் அத்தனை மூலைகளையும் தன் சிறகுகளுள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் பேரண்ட பட்சி இப்பணம். மதம், இனம், நிறம், மொழி, சாதி இவ்வத்தனை வேறுபாடுகளையும் கடந்து நிற்கும் ஒரே சமன்பாடு பணம். இருப்பதனைத்தையும் இழக்க வைத்து விட்டு, இழந்ததனைத்தையும் இருப்பது போல் காட்டும் ஏகாந்த போதை பணம். பணமிருந்தால் குற்றமிழைக்கப்பட்டவனும் குற்றவாளியாகலாம், குற்றவாளியும் குற்றமிழைக்கப்பட்டவனாகலாம்.

"குருதிக்குடுவை நிறைய
பெருங்குணம் சுமந்தபடி….

-குணமாவது புண்ணாக்காவது , உன் குடுவை என்ன தேறும்,, எவ்வளவு கொள்ளும்?

=அள்ள அள்ள குறையாத குணம் இருக்குங்க உள்ள..

-அதை வெச்சு என்ன பண்ண , அரை மூடை தேங்காய் வாங்க முடியுமா? சரி, அது என்ன வகை குடுவை? வெள்ளியா, பித்தளையா?

=இல்லைங்க இது குருதி குடுவை , ஆனா உள்ள குணம் இருக்குதுங்க..

-என்ன இருந்தா எனக்கென்ன, குருதி குடுவைய வச்சி நான் என்ன பண்ண, எவனாவது ஒட்டை விழுந்த குடுவை வெச்சிருப்பான், அவன் கிட்ட போயி உன் குடுவையை வித்துக்க, அப்பகூட குடுவைதான் விலை போகும், குணம் குப்பைக்குதான்."

இது கவிஞருக்கும், யாரோ ஒருவருக்கும் நடந்த உரையாடல் அல்ல. ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் உரையாடல். சிலசமயம் குடுவை நம்முடையது, சில சமயம் அடுத்தவருடையது. ஆட்கள் மாறலாம், ஆனால் இந்த உரையாடலின் முடிவுதான் இன்றைய யதார்த்தம். குடுவைக்கு மட்டுமே மதிப்பு, குணத்திற்கு அல்ல. அது அந்த குடுவைக்கு மனித உடல் என்று நேரடிப்பொருள் கொள்வதாயினும் பொருந்தும் அல்லது அலங்காரம், பகட்டு மற்றும் வெளிப்புறத்தோற்றம் என மறைபொருளாக கொள்வதாயினும் பொருந்தும்.

இந்தக் கவிதையின் பாடுபொருள் அனைவரும் அறிந்து அனுபவித்து உணர்ந்ததே, இருப்பினும் படிக்கும் ஒவ்வொரு முறையும், இதன் வரிகள் உண்மையை முகத்திலறைகிறது. எதையெல்லாம் பணத்தால் வாங்கமுடியாது என்று இப்போதும் எண்ணப்படுகிறதோ அவையனைத்தையும் பணம் தின்று விழுங்கி ஏப்பம் விட்டு காலம் பலவாயிற்று என்பதை படிப்படியாக உணர்த்தி செல்கிறது. அதை உணர்ந்தும் உணராமலும் அனைவரும் மீண்டும் மீண்டும் பணத்தின் பின் ஓடிக்கொண்டிருப்பதினாலேயே ஒவ்வொரு அறையும் வலிக்கிறது.

உயர்கல்வி உடுத்தி 
தெரு கடக்கும்போது 
அழுத்தமாய் சிரித்தது 
அழுக்குச் சமூகம் - நீ 
யாரென்பதை - நின் முகம் 
தவிர்த்து - பண முகாமே 
தீர்மானிக்கும் என்றபடி ! 


கல்வியில் துவங்குகிறார் கவிஞர். கண்ணுடையாரென்பவர் கற்றோர் என்பதெல்லாம் திருக்குறளோடு முடிந்து போன ஒன்று. பணம் பண்ணத் தெரியாத எந்த ஒரு பட்டத்திற்கும் சமூகவானத்தில் சிறகுகள் முளைப்பதில்லை. மாமேதையாக இருந்தாலும் மரமண்டையாக இருந்தாலும் வங்கிக் கணக்கு கொழுத்திராவிட்டால் , யாரும் அவரை மனிதராக மதிப்பதில்லை. 

பணம் தேடும் பொருட்டு, குறுக்குவழிச்சாக்கடைகளைனைத்திலும் புரண்டெழுந்த அழுக்குச் சமூகம், ஒருவன் பெயருக்கு பின்னிருக்கும் பட்டங்களின் எண்ணிக்கையலாலல்லாது , அவன் வங்கிச் சேமிப்பு பணத்திலுள்ள வட்டங்களின் எண்ணிக்கையை வைத்தே அவன் மதிப்பை கணிக்கிறதென்கிறார் கவிஞர். இது , லட்சுமி பூஜைக்கு சரஸ்வதிகள் பலிகடாவாக்கப்படுவதென நீங்கள் நினைத்தால், சிறிது சிந்தியுங்கள். பலிகடாவாக்கப்படுவதற்கு மட்டுமே சரஸ்வதிகள் வளர்க்கும் காலத்தில் இருக்கிறோம் நாம்.

என் திறமைகளை 
அளவீடு செய்ய மறுக்கும் 
செவிட்டு உலகம் 
செருப்பை உற்றுநோக்கி 
என்னை கணிக்கிறது ! 


தன் திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பதுதான், ஒரு மனிதன் தனக்குத் தானே செய்து கொள்ளும் மிகப்பெரும் துரோகம். அதற்கும் மேலான பெரும் பாவச்செயல் , அந்தத் திறமை சமூகத்தினால் ஊக்குவிக்கப்படாமலிருப்பது. பணத்தின் பகட்டான தோற்றமாயைதனில் ஏற்பட்ட மயக்கத்தினால் எண்ணற்ற திறமைக்கத்திகள் மழுங்கி விட்டன. 

உசைன் போல்ட்டுகள் கால் சென்டர்களில் உதட்டுச்சேவை புரிகின்றனர், நோபல் பரிசுகள் நோட்டுக்காக குளிரறைக்குள் கணிப்பொறி மேய்க்கின்றனர், ரஹ்மான்களும், ரவிவர்மாக்களும் பன்னாட்டு நிறுவனங்களின் காளான் பண்ணைகளில் அடுத்த பாசனத்திற்காய் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். பணமாக்கப்படாத திறமைகளுக்கு அகராதிகளில் வறுமை என்று பொருள் பொறிக்கப்பட்டுவிட்டது.

உண்மையை மடித்து 
முதுகுக்குப்பின் ஒழித்து 
போலிப் புன்னையோடு 
காசோடு காதல்புரி - உன் 
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு ! 

பணக்கார காதல்களுக்கு 
வாயிற்சீட்டும் - ஏழைக் 
காதல்களுக்கு வாய்ப்பூட்டும் 
பட்டுவாடா செய்யப்படுகிறது 
மேலும்சில காரணிகளோடு ! 


நேர்மைக்கு வருகிறார் கவிஞர். நன்றிக்கு நாணயம் என்ற பொருள்கொண்ட காலம் போய், “நாணய"த்திற்கு மட்டுமே நன்றி என்றாகிவிட்டது. கடமையை செய் பணத்தை எதிர்பாராதே என்று போதிக்காமல் பலனை எதிர்பாராதே என்று கூறி தவறிழைத்த கடனிற்கு ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இன்றுவரை வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம். நேர்மையால் அளவிடப்பட்ட மரியாதை இன்று நேர்மைக்குரிய விலையால் அளவிடப்படுவதாக மாறியுள்ளது.

விலைபோகும் ஒவ்வொரு நேர்மைக்கு பின்னும் ஆயிரம் சமாதிகள் மறைக்கப்பட்டுள்ளது. அங்கே புதையுண்டுள்ளது ஏழைகளின் காதல். உணவு, உடை, உறையுள் என்ற அத்தியாவசியத் தேவைகள்தான் ஏழைகளுக்கு காதலாக மாறி, பின் கனவாகிப்போய், பணத்தாசை பிடித்த நேர்மை விபசாரிகளின் கோரப்பிடியில் பிணமாகிப்போகிறது. பணக்காரர்களின் காதலான அடுத்த கோடி ரூபாய், அடுத்த சொகுசு கப்பல், அடுத்த தனி விமானம் ஆகிய அநாவசியத் தேவைகளுக்கு இதே விபசாரிகள்தான் இலவசமாக படுக்கை விரிக்கின்றனர்.

காற்றுபுகா இடத்திலும் காசு புகும் எனும் கூற்று மெய்ப்பட்டு, காசாலாகிவிட்டது இவ்வுலகம்.  இங்கே வலுத்தவன் வாழ்க்கை கொண்டாட்டம், இளைத்தவன் பாடு திண்டாட்டம். கல்வி, திறமை, நேர்மை, உரிமை எனும் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்பட்டாகிவிட்டது. இதில் எதாவது ஒன்றை எட்டி பிடிக்கும் ஓட்டப்பந்தயத்தில் கால்கள் முறிக்கப்பட்ட பிறகே வறியவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.


"கல்லறை கூட
சில்லறை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா!!

இல்லாதவன் சொல்
சபையேறாமல்
ஏளனமாகப் போகுமடா!!.."

என்று என்றோ எழுதிவிட்டு சென்று விட்டார் வாலி. இல்லாதவன் பிணத்திற்கு சமானமாக்கப்பட்டு , அவன் கல்வி உமிழப்பட்டு, திறமை நசுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு, வறுமைச்சுமையை முதுகிலேற்றி , ஒரு வேளை உணவுக்காய் கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சப்பட்டு விட்ட பிறகு மையிற்கு எங்கே போவது?, கண்ணீர் தொட்டுதான் கவிதை எழுத வேண்டும்.

No comments:

Post a Comment