Thursday 15 May 2014

கவிதையும் விமர்சனமும் 3




கவிதை      :  காடிழந்த யானைகளின் துயரம்.
எழுதியவர் :  நிஷா மன்சூர்.


மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள் 

விரும்பி வருவதில்லை அவை,
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால் 

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து 

அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை 

நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம் 

நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வாழ்வாதாரத்தை

அவற்றின் பிளிறல்களில் தென்படும்
உணர்வுகளை அறிந்த கானகநேசன்
மனநிலை பிறழ்ந்தவன் போல
கூச்சலிட்டு ஓடுகிறான் 

கலக்கம் மிகுந்து போனதை
கலவி மறந்து போனதை
கானகம் அழிந்து போனதை
காற்று கசந்து போனதை
சோகத்துடன் சொல்கின்றன அவை 


அந்த சிறிய கண்களில் கசியும் கண்ணீர்
உலுக்கி எடுக்கிறது நம்
அயோக்கியத்தனத்தின் மனசாட்சியை 

நம் பேராசையில் விரியும்
மாடி வீடுளில் நசுங்கிச் சிதைகின்றன
அவற்றின் எளிய இருப்பிட நியாயங்கள் 

உங்கள் வீட்டை நசுக்கிச் சென்ற யானை
ரயில் தண்டவாளத்தில் நசுங்கிச்செத்த
குட்டி யானையின் தாயாக இருக்கலாம் 


உங்கள் பயிர்களை அழித்து ஒழித்த யானை
நீங்கள் மின்வேலியில் சாகடித்த
யானையின் தந்தையாக இருக்கலாம் 

உங்கள் வாழைகளை சேதமாக்கியது
நீங்கள் வரவேற்பறையில் அழகுபார்க்கும்
தந்தத்தை அளித்த யானையின் உறவாயிருக்கலாம் 



அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அடுத்த முறை யானைகள் நகரத்திற்குள் புகுந்த
செய்தி படிக்க நேர்கையில்
உணர முயற்சியுங்கள்…
கலவி நிராகரிக்கப்பட்ட
யானைகளின் துயரத்தை…… 

கானகநேசன் இப்போது
உடைகளைக் களைந்துவிட்டு
காட்டுக்குள் உலவிக்கொண்டிருப்பதாய்த் தகவல். 




விமர்சனம் : ஈஸ்வரன் ராஜாமணி

ஒரு கற்பனை. உங்கள் வீட்டைச்சுற்றி ஒரு கிலோமீட்டர் விட்டமுடைய வட்டத்தில், ஒரு ஆழமான அகழி ஒன்று வெட்டப்படுகிறது. அதை உங்களால் தாண்டிச் செல்ல இயலாது எனும்போது, உங்கள் உலகம் அந்த வட்டத்தினுள் சுருங்கி விடும். பணி, பொழுதுபோக்கு என்று எல்லாமும் அந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிவிடும். அந்த அகழி காலப்போக்கில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மெள்ள, மெள்ள நீங்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.பணி இல்லை, பொழுதுபோக்கு இல்லை.சொந்தங்கள் மறைந்து விடும்.உணவு தீர்ந்து விடும்.வீடு சிறையாகி விடும். காலப்போக்கில், உங்கள் சுவடுகள்கூட இல்லாதவாறு அகழி அழித்து விடும். கற்பனை செய்ய முடிகிறதா?. கொடுமை என்று தோன்றுகிறதா?., இந்தக் கொடுமையைத் தான் நாம் வனவிலங்குகளுக்கு நிஜத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

"மாபெரும் துயரத்துடன்
 நகரம் நோக்கி
 வருகின்றன யானைகள்."

என்ற வரிகள் இந்தக் கவிதையின் ஆரம்பமல்ல, ஒரு மிகப்பெரிய சோகத்தின் முடிவு. கொல்லப்பட்ட காடுகளடங்கிய சவப்பெட்டிகளை அம்பாரியாய் சுமந்து வருகின்றன யானைகள். நீரிழந்து , உணவிழந்து, வீடிழந்து, வாழ்வதற்கான ஆதாரங்கள் அத்தனையையும் இழந்துவிட்ட நிலையில், பசியெனும் கோர அரக்கனால் துரத்தியடிக்கப்பட்டு நகரம் நோக்கி வருகின்றன யானைகள். 

"அவை வேண்டி நிற்கின்றன
  நம் இரக்கத்தை
 அவை யாசிக்கின்றன
 நம் கவனிப்பை"

 
அதன் முன்னோர்கள் முறித்து விளையாடிய மரங்களடர் வனங்களில் இன்று மின்சாரக் கம்பங்கள் வேரூண்றி நிற்கின்றன. அதன் பெருந்தாகம் தீர்த்த குளிர்நீர்த் தடாகங்கள், வற்றாத கழிவுநீர் ஊற்றாக மாறிவிட்டன. அதன் பெரும்பயணங்களால் உண்டான உணவுத் தடங்களில், இன்று தண்டவாளங்கள் நிரந்தரமாக குடியேறிவிட்டன. அன்றியும், அழிக்க மட்டுமே தெரிந்த மனிதனிடம் அனுதாபத்தை யாசித்து வருகின்றன யானைகள்.

"அவை மிரண்டு போகின்றன
 தம் மேகங்கள் தொலைந்தது குறித்து
 அவை திகைத்துத் தேடுகின்றன
 தாம் பறிகொடுத்த சுகவாழ்வை
 நாம் பறித்துக்கொண்டோம்
 அவற்றின் நீரை
 அவற்றின் உணவை
 அவற்றின் வாழ்வாதாரத்தை"

70% உயிரினங்கள் வாழும் காடுகள், உலகத்தின் நிலப்பரப்பில் இப்போது 30% மட்டுமே. இந்தியாவில் அதனினும் குறைவு, 21% மட்டுமே. மனிதப்பேராசையெனும் கோரப்பசிக்கு ஒரு நிமிடத்திற்கு 36 கால்பந்து மைதானங்கள் அளவிலான காடுகளை உலகம் இழந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு வருடங்களில் மழைக்காடுகளே இருக்காது என்று உலக வனவிலங்கு பாதுகாப்புக்கான நிதி நிறுவனமான WWF  எச்சரிக்கிறது. ஆமை புகுந்த வீடுகள் எல்லாம் நலமாகவே இருக்கின்றன, மனிதன் புகுந்த காடுகள்தான் அழிந்து விட்டன. காடு அழிய காற்று குறையும், காற்று குறைய மேகம் தொலையும்

உயிர்வளி உருவாக்குதல், மண் அரிப்பை தடுத்தல், நீர்சுழற்சியை சமன் படுத்துதல், உலகத்தின் ஒட்டுமொத்த தட்பவெட்பநிலையையும் சீராக வைத்திருத்தல் என நன்மை மட்டுமே பயக்கும் காடுகளை நகரமயமாக்குதல், கால்நடை மேய்ச்சலுக்கான நிலங்களாக மாற்றுதல், காகிதத் தயாரிப்பு என பற்பல காரணங்களுக்காக அழித்து வரும் மனிதன் செய்யும் அட்டூழியங்கள் பட்டியலிலடங்கா. உலகப்பேரழிவை தவணை முறையில் நிகழ்த்தி வரும் , வாழத்தகுதியில்லாத ஒரே உயிரினமான மனிதனால் வெகுவேகமாக வாழ்வை இழந்து வருபவை வனவிலங்கினங்கள்.
 
மறப்போரிலும், நெற்போரிலும் தொன்று தொட்டு நமக்கு துணையாய் நின்ற யானைகளை இன்று கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம். நேரடியாக தந்தத்திற்காகவும், மறைமுகமாக காடழிப்பினாலும் கொல்லப்பட்டு வரும் ஆசிய யானைகள் வெகுவேகமாக அழிந்து வரும் ஜீவராசிகள் பட்டியலில் இடம்பெற்று விட்டது. 1900களின் ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் இருந்த யானைகளின் எண்ணிக்கை இன்று 27000 மட்டுமே. ஜெயங்கொண்டார் கூட ஒரு பரணிதான் பாடினார், நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு புது பரணி பாடிக்கொண்டிருக்கிறோம்.

"அவற்றின் பிளிறல்களில் தென்படும்
 உணர்வுகளை அறிந்த கானகநேசன்
 மனநிலை பிறழ்ந்தவன் போல
 கூச்சலிட்டு ஓடுகிறான்.
 அந்த சிறிய கண்களில் கசியும் கண்ணீர்
 உலுக்கி எடுக்கிறது நம்
 அயோக்கியத்தனத்தின் மனசாட்சியை "

இன்னொரு இனம் நம் கண்முன்னால் அழிந்து வருகிறது. கண்ணை மூடிக்கொண்டு நாம் அதை அழித்து கொண்டிருக்கிறோம். நிலம் அதிர ஓடும் யானைகளின் வலுவிழந்த பிளிறல்கள் நம் காதுகளை எட்டுவதில்லை. நாம் காதுகளையும் மூடிக்கொண்டு விட்டோம். "நகரம் புகுந்த யானைகளின் அட்டகாசம்" என்பதை செய்தியாக மட்டுமே பார்த்து பழகிவிட்டது நமது ஆறாவது அறிவு. நாம் சிந்திப்பதையும் மறந்து விட்டோம்.

தான் நேசித்த கானகங்களின் அழிவைத்தாளாத களிறுகளின் பிளிறல்களைத்தான் நாம் அட்டகாசம் என்று ஒலிபெருக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு வீடு தரைமட்டமாவதையும், ஒரு வாழைத்தோட்டம் நாசமாவதையும் அட்டகாசம் என்றால், ஆயிரம் கானகங்களை அழிக்கும் மனிதனின் செயலுக்கு என்ன பெயர்?. 

"அடுத்த முறை யானைகள் நகரத்திற்குள் புகுந்த
 செய்தி படிக்க நேர்கையில்
 உணர முயற்சியுங்கள்…
 கலவி நிராகரிக்கப்பட்ட
 யானைகளின் துயரத்தை…… "

தண்டவாளத்தில் உருக்குலைந்து இறந்ததும், மின்வேலியில் துடிதுடித்து செத்ததும் வெறும் யானையல்ல. ஒவ்வொரு யானையும் ஒரு கானகத்திற்கு சமம். தாய் மரத்திற்கு கீழேயே விழும் எந்த விதையும் விருட்சமாவதில்லை. அதற்கு தேவையான சத்துகள் அனைத்தையும் தாய்மரமே உறிஞ்சி விடும். 

எப்போதும் பயணத்திலேயே இருக்கும் யானைக்கூட்டம் , எங்கோ உண்ட மரம், செடிகளின் விதைகளைனைத்தையும் வழியெங்கும் சாணத்தின் மூலமாக விட்டுச்செல்கிறது. அதன் சாணமே அந்த விதைகளுக்கு எருவாகிறது. பல கானகங்கள் உருவாகிறது. யானைகளின் பயணங்களினால் உருவாகும் பாதைகள்தான், பல வனவிலங்குகளுக்கு நீர் மற்றும் உணவுக்கான வழித்தடங்கள். இப்படி, தனது வாழ்நாளில் ஒரு கானகத்தை பிரசவிக்கிறான் இந்த கானகநேசன். ஆனால் மனிதனோ, ஒவ்வொரு நாளும் ஒரு கானகத்தை அழித்து கானகநேசனின் கலவி சுகத்தை பறிக்கிறான்.

இது கவிதையல்ல, மெள்ள மெள்ள அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வனவிலங்குகளுக்கான அபயக்குரல். அழிக்கப்படுவோர் வரிசையில் விரைவிலேயே இணையப்போகும் மனிதனுக்கான அபாய சங்கு. அடுத்த முறை நகரம் புகும் யானைகளின் செய்தியை படிக்க நேர்ந்தால் உலக அழிவை நோக்கி வெகுவேகமாக நகர்கிறோம் என்பதை உணருங்கள். இனியும் காடு புகும் மனிதன் செயல் தொடர்ந்தால், இதுதான் காடு என்று நிழற்படத்தை காட்டுவதற்கு நமக்கு சந்ததி இருக்காது.





















No comments:

Post a Comment