Monday, 26 May 2014

சாம்பார் வைப்பது எப்படி?!?!



சாம்பார் வைப்பது எப்படி?!?!


துவரையா?... கடலையா?…
இந்தப் பருப்பில்தான் எத்தனை வகை?
அவரையா?... முருங்கையா?...
எந்த சேர்ப்பில்தான் கூடுதல் சுவை?

அரை விடுமுறை நாளன்று,
ஆனைவயிறின் அசுரப்பசியில்,
அதிகப்பிரசங்கி நண்பன் கொடுத்த,
அநியாய யோசனைதான். 
சொந்த சமையல் சாம்பார்.

தட்டு கழுவக்கூட - சமையல் 
கட்டு பக்கம் சென்றதில்லை.
வெந்நீர் வைத்துக்கூட - எங்கள்
அடுப்பிற்கு அனுபவமில்லை.

இருந்தாலும் துணிந்து விட்டோம்,
இயலுமென்று இஞ்சியோடு.
போர்க்கோலம் பூண்டு விட்டோம்,
கரண்டி கடாய் கத்திரிக்காயோடு. 

எடுத்தவுடனே சந்தேகம்
எண்ணெய் எவ்வளவென்று?
என் நண்பனுக்கோ பெருங்குழப்பம்,
எந்த எண்ணெய் என்று?

இறைவன் விட்ட வழியென்றேன்-நல்ல வேளை
இருந்தது ஒன்றுதான் வேறில்லை.
எடுத்து ஊற்றி காய்ந்தவுடன்- இட்டேன்
கடுகு உளுந்து வேப்பிலை.

இட்ட கடுகும் வெடித்து தெறித்தது,
எம் வீரத்தமிழ்ப் பெண்ணைப்போல.
தெறித்த சூட்டில் பயந்து போனேன்,
எம் பெண்ணைத் தொட்ட கயவன்போல.

இடையில் வந்தது முனகல் சத்தம் - என்
இனிய நண்பன் அழுகும் சத்தம்.
வெட்டுகிறேன் வெங்காயம் பேர்வழியென்று,
கொட்டுகிறான் கண்ணீரை உப்புக்கென்று.

அழுத்தமானியும் அடித்து அழைத்தது,
கொடுத்த துவரையும் கொஞ்சமே வெந்தது.
திருகி நெருப்பை கூட்டி வைத்து,
திரும்பையில் தோன்றியது, புளியை மறந்தது. 

எலந்தையளவா? எலுமிச்சை அளவா?
எண்ணி மூளை குழம்பினேன்.
எருமை அளவை எடுத்துருட்டி,
நண்பன் கரைக்க, திடுக்கிட்டேன்.

வெள்ளையன் வெங்காயம் பொன்னனாக,
சிவந்த தக்காளி நாணிக் கரைய,
பச்சை மிளகாயை மேலாய்த் தூவி,
பார்த்துரசித்தேன் தேசக்கொடியின் அழகை அதனில்.

நான்காம் முறையாய் கூவிக்கூவி,
வெந்தேன் என்றது துவரம்பருப்பு.
சேர்த்தே இட்டதில் முருங்கைக்காயும்,
செந்தேன் ஆனது மிகவும் சிறப்பு.

அனுபவமிக்க பெண்டிற்கு - அரைத்தால்தான்
அது சாம்பார் பொடி.
அரைத்தறியா பிரம்மச்சாரிக்கு - அரைக்காசில்
அது கிடைக்கும் உடனடி.

எருமைப் புளியில் கையள வெடுத்து,
அருமைத் துவரை அனைத்தையும் கலந்து,
முருங்கை துண்டுகள் முழுதாய் சேர்த்து,
இருகுவளைத் தண்ணீரை கொடுத்தேன் கொதிக்க.

இறுதியாய் சிறிது பெருங்காயம் சேர்க்க,
உறுதியாய் ருசி பார்த்து உப்பைக் கூட்ட,
தென்றலாய் அறையெங்கும் சாம்பார் வாசம்,
நுகர்கையில் தெரிந்ததென் அன்னை நேசம்.

ஓரைந்து நிமிடங்கள் மூடி வைத்து,
அருகிலே சட்டியில் அரிசி சமைத்து,
அப்பளத்தோடு தான் உண்பதெப்படி!! - நாங்கள்
முதன்முதலாய் சாம்பார் சமைத்ததிப்படி!!!.



Sunday, 25 May 2014

கவிதையும் விமர்சனமும் - கண்ணீர் தொட்டு கவிதை எழுது



கவிதை : கண்ணீர் தொட்டு கவிதை எழுது
எழுதியவர் : வினோதன்

குருதிக்குடுவை நிறைய 
பெருங்குணம் சுமந்தபடி 
சமூகம் நோக்கினேன், 
தட்டிவிட்டபடி - கையில் 
சாக்குப்பை திணித்து 
பணம் பொறுக்கும்படி 
பரிவின்றி பணிக்கப்பட்டேன் ! 

உயர்கல்வி உடுத்தி 
தெரு கடக்கும்போது 
அழுத்தமாய் சிரித்தது 
அழுக்குச் சமூகம் - நீ 
யாரென்பதை - நின் முகம் 
தவிர்த்து - பண முகாமே 
தீர்மானிக்கும் என்றபடி ! 

என் திறமைகளை 
அளவீடு செய்ய மறுக்கும் 
செவிட்டு உலகம் 
செருப்பை உற்றுநோக்கி 
என்னை கணிக்கிறது ! 

ஏறி-இறங்கிய உடுப்பற்ற 
நான் - ஏற-இறங்கவே 
பார்க்கப் படுகிறேன் - என் 
அழுக்கற்ற அகம் பொசுங்க 
பொய்த்தூய்மை தேடப்படுகிறது ! 

உண்மையை மடித்து 
முதுகுக்குப்பின் ஒழித்து 
போலிப் புன்னையோடு 
காசோடு காதல்புரி - உன் 
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு ! 

பணக்கார காதல்களுக்கு 
வாயிற்சீட்டும் - ஏழைக் 
காதல்களுக்கு வாய்ப்பூட்டும் 
பட்டுவாடா செய்யப்படுகிறது 
மேலும்சில காரணிகளோடு ! 

எங்கு திரும்பினும் 
முகமதிப்பை மிதித்தபடி 
பணமதிப்பை கேட்கும் 
சமூகம் - எனைத்தள்ளிய 
இடம்தோறும் - எனைப்போன்றே 
பணப் பொறுக்குப் போருக்கு 
பழக்கபடாத முகங்கள் ! 

ஓர் நாள் விடியும் 
என்ற நம்பிக்கையை 
நெஞ்சிலும் - வறுமையை 
முதுகில் சுமந்தபடி 
வானவில் ரசிப்பதெப்படி...? 
நிறைய அழு - கண்ணீர் 
தொட்டு கவிதை எழுது !!! 



Thursday, 15 May 2014

கவிதையும் விமர்சனமும் 3




கவிதை      :  காடிழந்த யானைகளின் துயரம்.
எழுதியவர் :  நிஷா மன்சூர்.


மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள் 

விரும்பி வருவதில்லை அவை,
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால் 

அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து 

அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை 

நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம் 

நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வாழ்வாதாரத்தை

அவற்றின் பிளிறல்களில் தென்படும்
உணர்வுகளை அறிந்த கானகநேசன்
மனநிலை பிறழ்ந்தவன் போல
கூச்சலிட்டு ஓடுகிறான் 

கலக்கம் மிகுந்து போனதை
கலவி மறந்து போனதை
கானகம் அழிந்து போனதை
காற்று கசந்து போனதை
சோகத்துடன் சொல்கின்றன அவை 


அந்த சிறிய கண்களில் கசியும் கண்ணீர்
உலுக்கி எடுக்கிறது நம்
அயோக்கியத்தனத்தின் மனசாட்சியை 

நம் பேராசையில் விரியும்
மாடி வீடுளில் நசுங்கிச் சிதைகின்றன
அவற்றின் எளிய இருப்பிட நியாயங்கள் 

உங்கள் வீட்டை நசுக்கிச் சென்ற யானை
ரயில் தண்டவாளத்தில் நசுங்கிச்செத்த
குட்டி யானையின் தாயாக இருக்கலாம் 


உங்கள் பயிர்களை அழித்து ஒழித்த யானை
நீங்கள் மின்வேலியில் சாகடித்த
யானையின் தந்தையாக இருக்கலாம் 

உங்கள் வாழைகளை சேதமாக்கியது
நீங்கள் வரவேற்பறையில் அழகுபார்க்கும்
தந்தத்தை அளித்த யானையின் உறவாயிருக்கலாம் 



அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை 

அடுத்த முறை யானைகள் நகரத்திற்குள் புகுந்த
செய்தி படிக்க நேர்கையில்
உணர முயற்சியுங்கள்…
கலவி நிராகரிக்கப்பட்ட
யானைகளின் துயரத்தை…… 

கானகநேசன் இப்போது
உடைகளைக் களைந்துவிட்டு
காட்டுக்குள் உலவிக்கொண்டிருப்பதாய்த் தகவல். 


Thursday, 8 May 2014

வராத கவிதை!!


வராத கவிதை!!

வர வர எதுவும் 
தோன்றுவதில்லை எனக்கு.

எதையோ நினைத்து 
எதையோ தொடுத்து
எதையோ விடுத்து
எங்கே நிற்குதோ
என் எழுத்து.

குழப்பக் கயிறுகளின்
இடியாப்பச் சிக்கல்களில்
இணைப்புப் பாலந்தேடி
இங்கங்காய் அலைகிறது
சிந்தனைகள்.

வார்த்தை ஊற்றுக்காய்
தோண்டிய மனக்குழியினின்று
பீறிட்ட இருளருவி
உள்ளம் நிரப்பிச் செல்கிறது.

எதைத் தொலைத்தேனென்று 
எண்ணங்களில் தேடித்தேடியே
எண்ணம் தொலைய
எப்படித் தேடுவதென்று தெரியாமல்
தொலைகிறது மனம்.

எப்படியோ தோன்றிய 
எதோவொன்றும்
விசைமரத்த
விரல்நுனியில்
விழிபிதுங்கி நிற்கிறது.

எழுதுவதற்கு ஏதுமிலாது
அதையே எழுதலாமென
ஆரம்பித்த எனக்கு 
வரவர எதுவும் 

தோன்றுவதில்லை.

















Wednesday, 7 May 2014

விக்கிரமாதித்தனும் வேதாளமும்


விக்ரமாதித்தனும் வேதாளமும்

சற்றும் மனந்தளராத 
விக்ரமாதித்தன் -
மீண்டும் வேதாளத்தை,
தொலைத்து விட்டிருந்தான்.

இலவச மிக்ஸி , டிவி
இன்னபிற உபகரணங்களோடு -
இருளடைந்த உலகத்தில்,
வேதாளத்தை தேடுவது 
கடினமாகவே இருந்தது!!.

கால் ஏறி களைத்திருந்த
விக்ரமாதித்தன் கண்களுக்கு,
பச்சை போர்டுகளுக்கு
பின்னுள்ள வேதாளம்
தெரிவதே இல்லை!!.

எரிபொருள் நிரப்பியே
ஏழையான விக்ரமாதித்தன்,
ஷேர் ஆட்டோக்களில் 
குலுங்கியபடி தேடுகிறான்-
சாலைக்குழி வேதாளங்களை!!.

நிலக்கரி வேதாளம் 
அகப்பட்ட மகிழ்ச்சியில்,
காய்கறி வேதாளம்
மறந்து போய்விட்டது,
விக்ரமாதித்தனுக்கு!!.

தான் கடவுளாய் வணங்கும்
கார்ப்பொரேட் வேதாளங்களே,
தன் காசு மதிப்பை
கக்கூஸ் காகிதமாக மாற்றுவது-
விக்ரமாதித்தனுக்கு தெரியவே தெரியாது!!

எப்போதும் சாதி வேதாளமும்,
அவ்வப்போது போதி வேதாளமும்,
மீதி வேதாளங்களை
விக்ரமாதித்தனிடமிருந்து
மறைத்து விடுகின்றன!!.

விக்ரமாதித்தனிடமிருக்கும்
ஒரு விரல் உடைவாளும்,
ஐந்து வருடத்திற்கொரு முறை
ஐநூறு ரூபாய்க்கு,
விலை போகிறது.

இருந்தாலும்,

சற்றும் மனந்தளராத
விக்ரமாதித்தன்-
தினமும் தேடுகிறான்,
தானே தன் முதுகிலேற்றிய
வேதாளத்தை.

Friday, 2 May 2014

சிவனுக்கு வந்த சிக்கல்



"சிவனுக்கு வந்த சிக்கல்"

கழுத்தை சுற்றிய பாம்பை
கழற்றி வைத்துவிட்டு -
சிவபெருமான்,
சிந்தித்து கொண்டிருந்தார்.

ஓசோன் உடைத்து 
கைலாயம் புகுந்த,
கழிவுக் காற்று,
காசிநாதனின்
நாசியையும் விட்டுவைக்கவில்லை!!.

ஊரெல்லாம் பெருகிவிட்ட,
ஊர்திகளின் ஓங்காரம்,
உடுக்கொலியையும் தாண்டி
கிழிக்கிறது - அவன்
தோடுடைய செவிப்பறைகளை!!!.

கொண்டைவாழ் கங்கையும்,
சளி முற்றிப்போய்
இருமுகிறாள் - தன்
தொண்டைசூழ் நெகிழிகளால்!!.

அதிவிரைவு ரயிலுக்காய் - தன்
அரசமரத்தை இழந்து,
அநாதையாகிவிட்டேனென்று
அலறுகிறான்,
ஆனைமுகன்!!.

கார்பைடு சுடாத 
பழங்கேட்ட அவ்வைக்காய்,
காயாத கானகத்தே,
கால் கடுக்க தேடும் கந்தன்,
காலம் பலவாகியும் திரும்பவில்லை!!.

கொடிமரத்து நந்திகூட
கோமாரிக்கு பயந்து,
கால்நடை மருத்துவர் தேடி,
கருட வாகனத்தில்
பறந்து விட்டது!!!.

அயர்ந்து போன சிவன்,
ஆதிசக்தியை தேடுகிறான்.

தமிழ்நாட்டின் நிலையறிய,
தனியாகச் சென்ற
சக்தியை தேட,
நெற்றிக்கண் திறப்பினும்,
வெளிச்சம் போதவில்லை!!!.

இத்தனைக்கு பிறகும்,
“என்னை மட்டும் காப்பாற்று”
என்று வேண்டும் பக்தனிடம்,
“முதலில் என்னை நீ காப்பாற்றடா!!” வென்று -
சொல்லாமல் சிரிக்கிறான் சிவபெருமான்.

கழற்றி வைத்த பாம்பு - மீண்டும்
கழுத்தை சுற்ற ஆரம்பித்திருந்தது.